Saturday 7 October 2017

இடிபாடுகள் :காட்சி 6

காட்சி 6
நேரம்: மதியம் மணி 2
இடம்: காஞ்சனா வீடு
உறுப்பினர்கள்: சிந்தாமணி, காஞ்சனா, ராமாயி அம்மா ஒரு கர்ப்பிணிப் பெண் 4 சிறுவர்கள் 4 சிறுமிகள் மற்றும் வீராயி
(சிந்தாமணி மற்றும் வீராயி செருப்பைக் கழற்றி வெளியே விட்டு நுழைகிறாள். உள்ளே சுத்தியல்களில் புளி உடைக்கும் சத்தம் லொட் லொட் என்று ஒன்று மாற்றி ஒன்றாகச் சிறு தொழிற்சாலை போல் கேட்கிறது.
சிந்தாமணி: உள்ளே வரலாமா, (சிரித்தபடியே கேட்டுக் கொண்டு உள்ளே நுழைகிறாள்)
(புளி உடைக்கும் சுத்தியல்களின் ஓசை சட்டென்று நின்று ஒரு மௌனம் பரவுகிறது)
காஞ்சனா: அட வாங்க வாங்க பிரசிடெண்ட் அம்மா, வேகா வெயில்ல வீடு தேடி வந்துட்டீங்க.
சிந்தாமணி: நீங்க தான வரவச்சுட்டீங்க.
காஞ்சனா: நாங்களா…. நான் உன்னை இட்டாரச் சொல்லலியே
சிந்தாமணி: நீன்னா நீயாஅந்த ராமாயி அம்மா தான்
ராமாயி (வயதானவள்) : நான் என்னா கண்ணு சொல்லிட்டேன்?
சிந்தாமணி: (புன்சிரிப்பு மாறாமல்) மூணு நாளா தெரு லைட் எரியலே. ஒங்க குழிப்பணியார போண்டா வடை பிசினஸ் நடக்கலே. மூணு நாளா. அதுக்காக டில்லி கவர்மெண்ட்லர்ந்து பஞ்சாயத்து வரைக்கும் ஒரு புடிபுடிச்சுக் கடாஞ்சி வுட்டுட்டீங்க. சரியா?
ராமாயி: (கோபமாக) யாரு சொன்னது?
சிந்தாமணி: குருவி வந்து சொல்லுச்சு. அதுவே பறந்து போய் லைன்மேன கௌப்பிட்டு வந்து கம்பம் ஏறி லைட்ட மாத்தச் சொல்லிடிச்சு வௌக்கு இப்ப எரியுது.
ராமாயி: (முகமலர்ச்சியாக) நா என்னா கண்ணு பண்ணட்டும். நான் அத நம்பிப் பொளக்கிறவ முந்தா நேத்திக்கு முன்னால அரைச்ச மாவநானே மூணு நாளா தோச சுட்டுத் துண்ணு தீத்தேன்.
சிந்தாமணி: இப்ப போயி வௌக்கு எரியுதா இல்லியாண்ணு பாத்துட்டு வந்துடுங்க
ராமாயி: நீ சொன்னா சரிதான்!
சிந்தாமணி: ஊஹும் நீங்க எழுந்து போய்ப் பாத்துட்டு வரணும். எழுங்க. அதுவரைக்கும் நீங்க நசுக்க வேண்டிய புளிய நான் நசுக்கறேன்.
ராமாயி. எம்மா….. எம்மா…… வேண்ம்டா கண்ணு
சிந்தாமணி: போங்கன்னு சொன்னா போங்க (எதிரில் சென்று அவள் கையிலிருந்த சுத்தியலை வாங்கித் தான் அமர்ந்து புளி நசுக்கத் தொடங்குகிறாள்)
(ராமாயி தலையைத் தொங்கப் போட்டபடி தெருவை நோக்கி நடக்கிறாள்)
காஞ்சனா: (குறுக்கிட்டு) அத்தே வர்றப்ப அடுப்படியிலே மோர்ப்பானயிலே ஒரு டம்ளர் மோர் எடுத்தாங்க. பிரசிடெண்ட் அம்மா வெயிலுக்குக் கொஞ்சம் குடிக்கட்டும்.
சிந்தாமணி: அதெல்லாம் வேணாம் காஞ்சனா
காஞ்சனா: இவ்ள தூரம் இந்த வெயில்ல வந்து ஒரு டம்ளர் மோர் கூட     சாப்டாம போனீன்னா  எங்களுக்குத்  தான் கொறவு
சிந்தாமணி: சரிஒங்க பிரியம் (திரும்பிப் பார்த்து) அட கோவிந்தி கூட புளி நசுக்கறிப்பிலயா?
கோவிந்தி: (தலையைக் கோணி நாணத்தோடு) ஆமாங்கம்மா….. இப்படி சீசன்ல வந்து ஔச்சி நாலு காசு பார்த்தா தான உண்டு
சிந்தாமணி: பிளாஸ்டிக் குடம் கேட்டியாம எங்க மாமியாரு சூப்பர் கொடம் வாங்கி வச்சிருக்காங்க
கோவிந்தி: என்னா வெல
சிந்தாமணி: பதினெட்டு  ரூபா தான்! சகாயம்
கோவிந்தி: ரெண்டு கல்லு தொலவு நடந்து போயி கைமாத்தி இடுப்பி மாத்தி தலயிலே வச்சே பட்டு பட்டுன்னு கொடங்க ஒடஞ்சு போயிடுது சிந்தாமணி. தல எரிச்சலு  தாங்க முடியறதில்லே.
காஞ்சனா: பிளாஸ்டிக் கொடம்தக்குணு இருக்கு. நம்ம அம்மாவும், பாட்டியும் பாட்டிக்குப் பாட்டி எல்லாம் பித்தாளக் கொடமும் மண் கொடமும் சொமந்தாங்ஙகளாமே அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
சிந்தாமணி: (பேசாமல் யோசனையோடு புளி நறுக்கிறாள் பிறகு தலை நிமிரிந்து சுற்றியுள்ள சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறாள்) ஆமா…. இவுங்க எல்லாம் ஏன் ஸ்கூலுக்குப் போகாம இப்படி ஒக்காந்து புளி நறுக்கிட்டிருக்காங்க
கர்ப்பிணிப் பெண்: இஸ்கோலுக்குப் போயி என்னா வாரிக் கிளிச்சுடப் போறாங்க. நீ பரவால்லம்மா புத்தியோட ஒத்தப் பொட்டப்புள்ளய பெத்து நிறுத்திகிட்டே. அத அக்கறயாப் படிக்க வச்சுட்டு வர்றே. எங்க கதயச் சொல்லு. புத்தி கெட்டுப் போயி ஆம்பளப் புள்ள வேணும். ஆம்பளப் புள்ள வேணும்னு அடுக்கடுக்கா நாலு பொட்டப் புள்ளய பெத்துட்டோம்.
சிந்தாமணி: ச்சே! என்ன பேச்சு பேசறீங்க? ரெண்டோட நிறுத்தாமப் போனது ஒங்க தப்பு. அதுக்கு ஏன் பொட்டப்புள்ளங்கண்ணு சலிச்சுக்கிறீங்க?
வீராயி: நீ பரவால்ல அம்மா. ஒம் புள்ளய படிக்க வச்சு கலெக்டராவோ டாக்டராவோ இஞ்சினியராவோ ஆக்கிடுவே….. எங்க கெதி?
கர்ப்பிணிப் பெண்: நாலு பொட்டப் புள்ளங்களுக்குக் கஞ்சி ஊத்தறதே நாய் பட்ட பாடு இன்னும் அதுங்க பெரிசாயி கண்ணாலம் காட்சின்னு வந்து நின்னா நாங்க இவங்களப் படிக்கவச்சுப் போட்டு என்னாத்தப் பண்றது?
வீராயி: (நறுக்கிய புளியைக் கூடையில் வாரிக் கொண்டே) ஏதோ சீசன்ல இப்படி புளி நசுக்க, மல்லாக் கொட்ட உரிக்க, மானத்தோட கஞ்சியாவது குடிக்க முடியுது
சிந்தாமணி: படிக்க வேண்டிய வயசுலே அவங்க கண்ணக் கட்டிப் போட்டு வேல செய்ய வச்சு கஞ்சிய ஊத்திடுவீங்க. அப்பறம் அதுங்க காலத்தில் நாலு எழுத்து படிக்கலியேண்ணு ஒங்க மாதிரியே கெடந்து கொமயணுமா?
கர்ப்பிணிப் பெண்: அட போங்க அம்மா! இது நாள் வரிக்கும் இதுங்களப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புன்னதே ஒரு வேளயாவது வவுறார சத்துணவு கெடக்கும்ணுதான். பிச்சை எடுத்தாராம் பெருமாளு. அந்தப் புடுங்கினாராம் அனுமாருண்ணு அதுக்கும் ஒரு  வில்லங்கம் வந்துருச்சே.
சிந்தாமணி: என்ன என்ன? (புளி நசுக்கும் சுத்தியல் நிறுத்திக் கேட்கிறாள்)
வீராயி: பின்ன என்னம்மா? நம்ப ஸ்கோல்ல போடற சத்துணவு வயத்தில அடிச்சு வாங்கிச் சாப்பிடறாரு சத்துணவு போடறவரு
சிந்தாமணி: என்னம்மா சொல்றீங்க? கொஞ்சம் வெலவரமாச் சொல்லுங்க.
வீராயி: ஒனக்குத் தெரியவே தெரியாதா சிந்தாமணிம்மா?
சிந்தாமணி: நெஜம்மா தெரியாது
வீராயி: நம்ம ஸ்கூல்ல போடற சத்துணவுல சத்தும் இல்ல உணவும் இல்ல. ங்க இருக்கற சத்துணவுப் பெருச்சாளி குறுக்கால குளி தோண்டி உண்டது போக கண்டது மீதிண்ணு கண்ணத் தொடச்சு விட்டு கை காமிச்சு வுட்டுடறாரு.
சிந்தாமணி: இத ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்ல்லே?
வீராயி: ஏம்மா ஒவ்வொண்ணுத்துக்கும் வந்து உன்னாண்ட நிண்ணு நிண்ணு ரொதி குடுத்துட்டிருந்தா சீ போங்கடிண்ணு நீயே சலிச்சுப் போயிட மாட்டே
கர்ப்பிணிப் பெண்: ஒங்கிட்ட வந்து சொன்னா நீ போயி கண்டிப்பு பண்றேண்ணு வச்சுக்க. ரெண்டு நாளைக்கி யோக்கியமாப் போடுவாரு மூணா நாளு தெசை திரும்பிடுவாரு
சிந்தாமணி: அப்ப நீங்கள்ளாம் ஒண்ணாச் சேந்த ஏன் போயிக் கேக்கல?
கர்ப்பிணிப் பெண்: ஆமா ட்டச்சிங்க எழுந்து நிண்ணு பெரிய புரட்சி பண்ணிக் கிளிச்சுடுவம்.
சிந்தாமணி: இதான்….. இதான்….. இத தான் கபோதித் தனம்ங்கறது. நாம பொட்டச்சிங்க  நாம  பொட்டச்சிங்கண்ணு நாமே பாறாங்கல்ல ஏத்தி தலையில வச்சுக்க வேண்டியது. அப்புறம் எங்க தலைல சொமை எங்க தனலை பளுண்ணு பொலம்ப வேண்டியது. எந்தக் காலத்தில இருக்கறீங்க? தூக்கிப் போட்டுட்டு வந்து முச்சந்திக்கு வந்து குரல் கொடுங்க தோ….. ராமாயி கொரல் குடுதுக் கரண்ட் வௌக்க எரிய வைக்கல
(எல்லாரும்கொல்லென்று சிரிக்கின்றனர்)
சிரிச்சிட்டீங்க சந்தோசம். எனக்கும் சிரிப்பு வந்துட்டுது. ஆனா நடக்கற அக்குருமத்த எதித்த்துக் கேக்கறதுக்கும் போராடறதுக்கும் நீங்க முன்வர்ற வரிக்கும் ஒரு தெருப்புளுதியும் இருக்கற எடத்த வுட்டு நவுராது (வீராயி பக்கம் திரும்பி) ஆனா இத நான் விடப் போறதில்லே. ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டிய வயசுலே புள்ளைங்கள மடக்கி வச்சு வேல வாங்கிறது தப்பு. அதுக்குத் தண்டனை உண்டுண்ணு சட்டமே போட்டுட்டாங்க
வீராயி: சட்டத்துக்கு என்னா? நாக்காலில ஒக்காந்து பேன் காத்து வாங்கிட்டு போட்டுருவாங்க. இங்க நடமொறைக்கு வந்து நாலு புள்ளங்களப் பெத்து வளத்துக் கஞ்சி ஊத்திப் பாத்தாங்கன்னா தெரியும்?
சிந்தாமணி: (எரிச்சலுடன்) அட என்னாக்கா சும்மா கஞ்சி கஞ்சின்னு பொல்லாத கஞ்சி ஊத்தற வளாட்டம் கத பேசறே? கண்ணத் தெறந்து வுட்டுடு. அதுங்க வசதிய அதுங்க தேடிக்கிட்டோம்ணு சொல்றேன். கஞ்சி ஊத்தறேன்னு பாட்டு பாடறே.
காஞ்சனா: சிந்தாமணி சொல்றது நாயந்  தானேம்மா. அவங்கப்பா இவள அவ்வளோ படிக்க வக்கலின்னா இவ பிரசிடென்ட் ஆயிரக்க முடியுமா? இவ படிச்ச காலத்தில ஸ்கோலே நம்ம ஊர்ல இல்ல. இப்ப எட்டாங்கிளாஸு வரைக்கும் இருக்கு
சிந்தாமணி: அடுத்த வருசம் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க ஹைஸ்கூலு கொண்டு வரத் திட்டம் போட்டிருக்கோம்நீங்க எல்லாருமே நாளைக்கு உங்க புள்ளங்கள தப்பாம அனுப்புங்க. அவங்க :சாப்டறது சத்துணவா இல்லியாண்ணு நான் போய் செக் பண்ணிட்டு வர்றேன்.
காஞ்சனா: நீ சுடுகாட்டுக்கு ரோடு போடுவியாகுடி தண்ணிக்கு ஓவர் டாங்கு கட்டுவியா அதுல இத வேற ஒந்தலைல ஏத்தணுமா நாங்க?
சிந்தாமணி: இது என்னா காஞ்சனா. எல்லாத்தயும் நானே செய்யறாப்பில ஒதுக்கி வச்சி ஓரங்கட்டறேநாம செய்யறோம். ஒண்ணா சேர்ந்து செய்யறோம். நீங்கள்ளாம் ஓட்டுப் போடலேண்ணா நான் இல்லே நான்தலைவி ஆயிருக்க முடியாது. நீ தலைவி ஆயிட்ட டீண்ணு நீங்க ஒதுக்கினாக் கூட நான் ஒதுங்கிட மாட்டேன்.
நம்மால ஒரு காரியத்த செஞ்சு நெல நிறுத்திக் காட்டவேண்ணா இந்தப் பத்தி என்னாத்துக்கு பகட்டுக்கா? பவுசுக்கா? தூக்கி எறிஞ்சுப் போட்டுட்டு நான் ஒங்களோட வந்து நிண்ணுக்குவேன்.
வீராயி: இந்த வார்த்தைபோதும் சிந்தாமணி நாங்க உன்ன உட்டு நவர மாட்டோம்.
(ராமாயி வாயெல்லாம் பல்லாக கையில் மோர்த்  தம்ளருடன் வருகிறாள்)
சிந்தாமணி: என்ன ராமாயம்மா. திருப்தி தானா? (புளி நறுக்கிய படியே கேட்கிறாள்)
ராமாயி: எம்மாடி கண்ணு…. நீ தாண்டி மனுஷி
(ராமாயி கொடுத்த மோர் டம்ளரை வாங்கிக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்து விட்டு எழுந்திருக்கிறாள் சிந்தாமணி)
சிந்தாமணி: (புளி நசுக்கும் சிறுவர் பக்கம் திரும்பி) நீங்க நாளயிலேர்ந்து யாரு என்ன சொன்னாலும் நிக்காம பள்ளிக் கூடம் போறீங்க என்ன சரியா?
சிறுவர்கள்: சரிங்க அக்கா
சிந்தாமணி: (காஞ்சனா பக்கம் திரும்பி) புளி நசுக்கறதுக்கு வேற பெரிய ஆளுங்க கெடைக்க மாட்டாங்களா காஞ்சனா?
காஞ்சனா: ஏன் கெடைக்காம? அத நாங்க பாத்துக்கறோம்.
சிந்தாமணி: இவங்க சத்துணவு விசயத்த நான் நாளைக்கே சரிப்படுத்தறேன். அப்பறம் இன்னொரு விசயம். இப்படி ஒரு தொழில் விட்டா இன்னொரு தொழில்னு சீசனுக்கு சீசன் அல்லாடறத விட்டுட்டு நெரந்தமா ஒருவழீ தேடிக்க ஒங்களுக்கு யோசனை வரலே?
வீராயி: யோசனை வந்து என்னா பண்றது?
(கையைச் சுண்டிக் காட்டி) துட்டு வேணுமே
சிந்தாமணி: நம்மளச் சுத்தி என்ன நடக்குதுண்ணே தெரியாம இருந்தா துட்டு எப்படி வரும்?
காஞ்சனா: புரியலியே…. புரியறாப்பிலே சொல்லு
சிந்தாமணி: சுய உதவிக் குழுக்கள்ணு நாம குழுக்கள் அமைச்சு சின்னச் சின்னத் தொழில் பண்றதுண்ணா கடனுதவி கெடைக்கும். ஆனா நாம்ப குளுவுங்கள அமைக்கணும்.
காஞ்சனா: நீ கோடு போட்டுக் காட்டு நாங்க ரோடு போட்டுர்றோம்
சிந்தாமணி: அப்படி வாங்க காஞ்சனா நீ தான் குழுவோட தலைவி. ரெண்டு மூணு நாள்ல நாம்ப சந்திச்சு வெவரம் பேசுவோம். நான் வர்ட்ட்டாஎங்க வூட்டுக்காரு வந்துட்டிருப்பாரு
(சிந்தாமணி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வருகிறாள்)
[தொடரும்]


Friday 6 October 2017

இடிபாடுகள் :காட்சி 5

காட்சி 5
காலம்: பிற்பகல் மணி 2.00
இடம்: தெரு
உறுப்பினர்: (1) சிந்தாமணி (2) லைன்மேன் (3) லைன்மேனுக்குத் துணையாள்
(சிந்தாமணியின் டிவிஎஸ் 50 பஜனைக் கோயில் தெருவில் உள்ள ஒரு தெரு விளக்கின் அருகில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தெரு விளக்குக் கம்பத்தின் மேல் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறார். வெயில் கண்ணில் விழாமல் நெற்றி மேல் கை வைத்து சிந்தாமணி விளக்குக் கம்பத்தில் ஏறுகிறவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கம்பத்தின் கீழே நிற்கும் லைன்மேன் ஏறுபவரைப் பார்த்தவாறு நிற்கிற சிந்தாமணியிடம் பேச்சுக் கொடுக்கிறார்)
லைன்மேன்: என் சர்வீஸ்ல ஒரு தெரு விளக்கு எரியாததுக்கு இவ்வளோ அக்கறை எடுத்துப் பாத்துக்கிட்ட மொத பிரசிடெண்ட் நீங்க தாம்மா.
சிந்தாமணி: ஐஸ மட்டும் வெச்சுடுவீங்க. ஆனா ஆளுங்கள எப்பவும் அலைய வுடுவீங்க.
லைன்மேன்: பாத்தீங்களாபாத்தீங்களாநான் ஏம்மா ஒங்களுக்கு ஐஸு வெக்கணும்? என் அநபவத்தில் கண்டத்த சொல்றேன்.
சிந்தாமணி: மூணு நாளா நான் ஆள வுட்டுச் சொல்லியும் நீங்க கண்டுக்கல.
லைன்மேன்: ஐயோ, அது எங்க தப்பு இல்லம்மா? இந்த எல்பரு மச்சினி கண்ணாலத்துக்கு லீவ் போட்டுப் போயிட்டான். நான் ஒண்டிக்காரன் எத்தினி ஃபால்ட்டப் பாக்கறது. எனக்கு இன்னா சந்தேகம்னா இந்த பல்பு பீஸ்  போயிருக்கணும்.
விளக்குக் கம்பத்தில் ஏறிய ஹெல்பர்: (கீழே குனிந்து லென்மேனிடம்) அண்ணாத்த, பல்ப் தான் பீஸ் போய்ட்டிருக்கு.
லைன்மேன்: பாத்தீங்களா…. நான் சொன்னது கரக்டாப் போச்சு! (மேலே உயர அண்ணாந்து பார்த்து) பல்ப்ப மாத்திர்றா முனியா!
ஹெல்பர்: தோ (ஒரு கையால் கம்பத்தைத் தழுவிப் பிடித்தபடி மற்றொரு கையால் வலது பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு புது பல்ப் எடுத்து மாட்டுகிறான்)
லைன்மேன்: இந்த பல்புனாலேதாம்மா தாமதம் ஆயிடுச்சு. எங்க கொடவுன்ல போய் எப்ப கேட்டாலும் பல்பு ஸ்டாக் இல்லே இல்லேன்றாங்க. நீங்க இம்மாந் தொலவு வற்புறுத்ததனால நான் நேத்திக்கு ஒரே ஒர பல்பாவது குடுங்கய்யாண்ணு கேட்டு வாங்கியாந்தன்.
சிந்தாமணி: ரொம்ப நன்றிங்க லைன்மேன்!
லைன்மேன்: ஐயஎனக்கு என்னாத்துக்கும்மா நன்றி…. கடமயச் செய்றோம். நீங்க தூண்டுகோலா இருக்கறதால வெரசலா செய்றோம். மெய்யாலும் நன்றி சொல்லணும்னா இந்த தெருக்காரங்க ஒங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். முக்கியமாக அந்த எதிர்வூட்டுக்காரங்க.
சிந்தாமணி: (எந்த வீட்டைத் திரும்பிப் பார்த்துவிட்டு)   ஏன் அவ்ள குறிப்பா அந்த வீட்டச் சொல்றீங்க?
லைன்மேன்: அந்த வூட்டுக்காரம்மா தெரு லைட் வெளிச்சத்திலே ராத்திரியிலே குளிப்பணியாரம் வடை போண்டா சுட்டு விக்கும். மூணு நாளா பிசினஸ் இல்லே. அது நேத்து பூரா தெருவுலே ஒக்காந்து என்னாடா கவுருமெண்ட்ட என்னாடா பஞ்சாயத்துண்ணு வர்றவங்க போறவங்க கிட்டல்லாம் நிக்க வச்சு கடாஞ்சு வுட்டுடிச்சி.
சிந்தாமணி: (சிரித்துவிட்டு) அப்படியா? இப்ப நான் போயி அந்தம்மாவ வெளிய கூட்டிட்டு வந்து காட்டிடறேன்.
லைன்மேன்: ஐய நீங்க வேற! லைட் எரியுதுண்ணு கண்ணால வேற காட்டணுமாக்கும். போங்கம்மா நீங்க.
சிந்தாமணிஇல்லீங்க லைன்மேன். ஏதோ குழிப்பணியாரம் வட போண்டா வித்து நடக்கற பொழுப்பு நின்னு போனா வருத்தம் தானே! இப்ப ஆறுதல் வரும். நீங்க     ஹெல்பர் கிட்ட ஃபீஸ் கேரியர மாட்டச் சொல்லுங்க.
லைன்மேன்: டே முனியா! ஃபீஸ் கேரியர மாட்டு. பிரசிடெண்ட் அம்மாவுக்கு வௌக்க எரிய வுட்டுக்காட்டு.
(ஹெல்பர் பீஸ் கேரியரை மாட்டவும் விளக்கு  எரிகிறது)
சிந்தாமணி: இப்படியே கொஞ்ச நேரம் எரியட்டுமே!
லைன்மேன்: ! தாராளமா
சிந்தாமணி: நன்றிங்க லைன்மேன்.
லைன்மேன்: இருக்கட்டும்மா

(சிந்தாமணி தெரு  விளக்குக் கம்பத்திற்கு எதிரில் உள்ள வீட்டினுள் நுழையத் திரும்புகிறாள்)

Tuesday 3 October 2017

காட்சி 4

காட்சி 4
காலம்: முற்பகல் 11,30 மணி
இடம்: மாங்குடி பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடம்
உறுப்பினர்கள்: சிந்தாமணி சுசீலா  உட்பட பதிமூன்று பேர். ஒரு கிளார்க்
வெளியே சிலர் கும்பலாகக்  கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றனர்.. உள்ளே பஞ்சாயத்து அவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய மேஜைக்குப் பின் நாற்காலியில் சிந்தாமணி உட்கார்ந்திருக்கிறாள். இடது கைப்புறமாக ஒரு ஸ்டூலில் ஒரு கிளார்க் உட்கார்ந்து குறிப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார். மேஜைக்கு நேர் எதிரே வலப்புறமும் எதிர் வரிசையில் ஆறு ஆறு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒரு நாற்காலி காலியாக  உள்ளது. மற்ற நாற்காலிகளில் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர். தலைவர் மேஜைக்கு அடுத்துள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த செவத்தான் எழுந்து கையை வீசி வீசி ஆவேசமாகப் பேசுகிறார்.
செவத்தான்  இருக்கற வேலைய வுட்டுட்டு செரைக்கறதுக்கு போவற திட்டம் தான் சுடுகாட்டுக்கு ரோடு போட்டு தெரு  வௌக்குப் போடற திட்டம். இப்ப என்னா தெனம் நாலு பொணமா போவுது அங்கே? ரோடு போடற செலவு எஸ்டிமேட்டு அறுவத்தி ஏழாயிரம்ணு இஞ்சினீயரு சொல்றாரு.
நாராயணன்: (எழுந்து நின்று) நம்ப பஞ்சாயத்து வருச வருமானமே ரெண்டு லச்சத்து அறுவதாயிரம். இதுல சிப்பந்தி சம்பளம் தோட்டி தலையாரி சம்பளம் அது இது போக்கு மீதி நிக்கறது நிகரம் ஒரு லச்சம் தேறினா ஒசத்தி. இந்த தொகையில கிட்டத்தட்ட முக்கா லச்சத்த முழுங்கறாப்பிலே சுடுகாட்டுக்கு ரோடு போட்டுத் தீத்துட்டா மீதிய வச்சு எந்தப் பொடலங்கா வளர்ச்சி பண்றது?
காத்தவராயன்: (எழுந்து குறுக்கிட்டு) ஏற்கனவே போட்டிருக்கற தெரு வௌக்குங்களே எரியறதில்லே இதிலே சுடுகாட்டுக்கு ரோடு போட்டு வௌக்கு வேற வெக்கப் போறாங்களோ?
சுசீலா: (எழுந்து) எந்த வார்டுலே எந்த்த் தெருவிலே வௌக்கு எரியலேண்ணு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க.
காத்தவராயன்: (அவளை முறைத்துப் பார்த்துவிட்டு) ஏன்……. நீயும் இநத் ஊர்க்காரி தானம்மா…. எங்க பஜனைக் கோவில் தெருவுல எரிஞ்சுகிட்டிருந்த வௌக்கு அவிஞ்சு நாலஞ்சு நாளாச்சே.
செவத்தான்: அது ரவ்வா ரவிக்குட்ம ஆள் நடமாட்டமும் வண்டி நடமாட்டமும் உள்ள எடம். முக்கு மூலை. அங்கயே வௌக்கு எரியலே….. எங்க ஊட்டுக்காரி ரெண்டு தபா  தலைவி அம்மா வீட்டாண்ட போயி சொல்லிட்டு வந்தாங்க நானும் ஒரு வாட்டி சொன்னேன். ஒரு சுக்குச்  சுண்ணாம்பும் ஆகலே. இந்த லச்சணத்திலே சுடுகாட்டுக்கு ரோடு போட்டு அங்க பொணம் எரியற வேடிக்கயைப்  பார்க்க தெரு வௌக்கு போடக் கௌம்பிட்டீங்க.
அழகப்பன்: (தன் எதிரில் குடிநீர் ஜக் வைத்திருக்கும் சிறு மேஜை அதிர அதை பலக்கத் தட்டி விட்டு உரத்த குரலில் பேசத் தொடங்குதகிறார்) நம்ம ஊரு மந்தவெளி மைதானத்திலே வருசா வருசம் எருது விடும் திருவிழா நடத்தறோமே! அங்கே ரோடு சரியில்லே….. சுத்துப் பக்கம் எல்லா இடத்திலே இருந்தும் நூத்துக்கு மேல மாடுங்க வருது. ஆயிரக்காணக்கா ஜனக்கூட்டம் வருது. அந்த எடத்துக்கு மொதல்ல ரோடு போடணும்னு போன வாட்டி கொண்டு வந்த தீர்மானத்த அடுத்த வருசம் பாத்துக்கலாம்ணு தள்ளிப் புட்டீங்க. இப்ப சுடுகாட்டுக்கு ரோடு போட என்னா அவசரம்? செவத்தான் சொன்னாப்பலே அங்கே தெனந்தெனம் நாலு ணமாப் போவுது?
வடிவேலு (ஓர் உறுப்பினர்): பிரசிடெண்ட் சிந்தாமணிம்மா வூட்டுக்காரன் முத்துசாமி காண்ட்ராக்ட் எடுத்துநாலு காசு பாக்க வேணாமாய்யா காண்ட்ராக்ட்காரருக்கு தொளில் வேணும்ல?
(தொடர்ந்து நாலைந்து ஆண் குரல்கள் காச் மூச் சென்று கத்தும் இரைச்சல்)
சிந்தாமணி: (மேஜையை மூனறு முறை கையால் உரத்த ஓசை வரும் வித்த்தில் தட்டியபடி எழுந்து நின்று) அமைதி….. அமைதி
சுசீலா: (கோபத்தோடு குறுக்கிட்டு) இவங்கள்ளாம் என்ன காரணத்துக்காக சுடுகாட்டு ரோடு வேண்டாம்ணு எதிர்ப்பு சொல்றாங்கண்ணு புரியுது. அங்க ரோடு போட்டா ஜீப்பும் வந்துடும். அப்படி வந்துரக் கூடாதுண்ணு இவங்க அபிப்பிராயம் முக்கியமா கள்ளச்சாராயம் காச்சி விக்கிற பழைய பிரசிடெண்ட் ஐயாக்கண்ணு மகன் மருதப்பன் தொளிலுக்கு அது எடஞ்சல் ஆயிடும்.
இரண்டு மூன்று ஆண் குரல்கள்: ஒக்கார்றீ, நீ யாருண்ணு எங்களுக்குத் தெரியும்?
செவத்தான்: நீ என்னா சொல்ல வர்றடீ? நாங்க கள்ளச் சாராயம் வாங்கிக் குடிக்கறவங்கறியா? கைக் கூலிங்கறியா? இன்னொரு தபா இப்படிப் பேசனே…… நடக்கறதே வேற!
(காத்தவராயனும் வடிவேலுவும் அவளைத் தாக்கப் போக வேறு இருவர் பாய்ந்து அவர்களைத் தடுத்துப் பிடிக்கிறார்கள்……. வலுக்கட்டாயப்படுத்தி அவர்களை நாற்காலியில் அமர்த்துகின்றனர்)
நின்று கொண்டிருக்கும் சிந்தாமணி மேஜையை ஓங்கி மீண்டும் இருமுறை தட்டுகிறாள்.
சிந்தாமணி: (கம்பீரமான குரலில்) அமைதி….. அமைதி.
(அந்தக் குரலில் தொனிக்கும் கம்பீரத்தால் கூட்டம் அமைதியாகிறது)
இது பஞ்சாயத்துக் கூட்டம் சந்தக் கடையோ, மீன் கடையோ இல்லே. ஆமபள மெம்பருங்க பொம்பளை உறுப்பினரை வாடீ போடீண்ணு வாய்க்கு வந்தாப்பிலே பேசறத நான் அனுமதிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் அக்கா தங்கச்சியும் பெஞ்சாதியும்  தாய்மாரும் இருக்காங்க. அவங்கள இப்படி வேற யாராவது தரக் கொறவா பேசினா நீங்க தாங்கிட்டு இருந்துடுவீங்களா? கொஞ்சமாவது கௌரவமாப் பேசறது தான் பெரியவங்களுக்குக் கண்ணியம் (சுசீலாவின் பக்கம் திரும்பி) சுசீலா. நான்  பேச எழுந்தப்பறம் நீங்க குறுக்கிட்டுப் பேசுனது தப்பு. அதனாலதான் வெவகாரமாயிடுச்சு. யார் பேச எழுந்தாலும் அவங்க பேசி முடிக்கற வரை காத்திருந்துட்டுப் பேசுங்க. (மெம்பர்கள் பக்கம் திரும்பி) சுடுகாட்டுப் பக்கம் யார் கள்ளச் சாராயம் காச்சறாங்கண்ணு கண்டிக்கறது இல்லே நம்ம தீர்மானம். சுடுகாட்டுக்கு ரோடு போடணுமா வேணாமா? இதான் விவாதத்துக்கு எடுத்துக் கிட்டிருக்கற தீர்மானம்.
செவத்தான்: ரோடு போடறதுக்கு செலவு பண்ற அளவு நம்ம பஞ்சாயத்தில பணம் இல்லே. நான் இதக் கடுமையா  எதிர்க்கிறேன். (சொல்லிவிட்டு உட்கார்கிறார்)
சிந்தாமணி: நாம மொதல்ல போடப் போறது மண் ரோடுதான். அதுக்கும் ஒவ்வொரு வார்டர் போயி நான் வேண்டிக்கிட்டதுல மாட்டு வண்டி வச்சிருக்கிற நாலு பெரிய மனசுக்காரங்க மூணு நாளைக்கு வண்டியும் மாடும் எனாமா ஓட்டிக்கிட்டு வர ஒத்துக்கிட்டாங்க
நாராயணன்: வண்டி மாடு வந்தாப் போதுமா? மண்ணை எங்கருந்து வெட்டிக் கொண்டாருவீங்க? மண்ண வெட்டி   வண்டில ஏத்த வெட்டு கூலிக்கு எங்க  போவீங்க?
சிந்தாமணி: அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். இளைஞர் நற்பணி மன்றத்து இளைஞருங்க எல்லாருமாச் சேந்து ஏரி மண்ணை வெட்டி எலவசமாக் கூலி வாங்காம கொண்டு வந்து போட ஒப்புத்துட்டாங்க. அவங்களுக்கு டீ காபி சாப்பாட்டு வகையறாவ நாங்க பாத்துக்கறோம். அப்படின்னு நம்ம ஊரு சேவா  நிலையம்ங்கற தன்னார்வ மையம் ஏத்துக்கிட்டிருக்கு.
வடிவேலு: மண்ணை வெட்டி வண்டிலே ஏத்திட்டா மட்டும் போறுமா? அத இங்க ரோடு மூச்சூடும் வந்து கொட்டத் தாவலே?
சிந்தாமணி: ஏரி மண்ணை சுடுகாட்டு ரோடு பக்கம் எடதுபுறமும் வலது புறமும் எட்டெட்டு பிளாக்கா கொண்டாந்து கொட்டிடுவாங்க. அதப் பரப்பி நெரவி விடணும். அப்பறம் ரோடு ரோலர் போட்டு சமப்படுத்தி விடணும். நாலு பொம்பள ஆறு நாலு ஆம்பள ஆளு ஒரு மேஸ்திரி இருந்தாப் போறும். அவங்களுக்கு நாள் கூலிக்கணக்கா அன்னாடம் ஆறு நூறு ரூபா மேனிக்கு மூணு நாலு நாள் குடுத்தாப்போது. மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டாயிரம் ரூபா கூட ஆவாது.
நாராயணன்: எத்தனையோ வேலைங்களும் திட்டமும் இருக்க குறிப்பா ஏன் சுடுகாட்டு ரோட்டுக்கு இப்ப அவசரம்?
சிந்தாமணி:  (புன்முறுவலுடன்) மேச்சலுக்கு கால்நடைகள ஓட்டிட்டுப் போறவங்க வர்றவ வெறகுச் சுமை எடுத்து வர்றவங்கண்ணு அங்கே தெனம் ஜன நடமாட்டம் இருக்கு. அதோட பஞ்சாயத்துப் பொறம் போக்கு நெலத்தில வச்ச தோப்பிலர்ந்து மரங்கள திருட்டுத்தனமா வெட்டிடறாங்க. அதுவும் ராத்திரி நேரத்திலே. அங்க ரோடு போட்டு  வெளக்கும் போட்டா அத தடுக்க முடியும்.
செவத்தான்: (எழுந்து நின்று) ஊருக்குள்ளற எரியற வௌக்கே எரியறதில்லே….. அங்க எங்கே எரியப் போவுது?
சிந்தாமணி: தயவு செஞ்சு உட்காருங்க. பஜனைக் கோவில்  தெரு வௌக்குக்கு ரெண்டு நாளா சொல்லி கிட்டு வர்றேன். கரண்ட் ஆபீஸ்ல. இன்னிக்கு நிச்சயம் விளக்கு எரியும். மந்தவெளில ரோடு போடணும்ணு எட்டாவது வார்டு மெம்பர் சொன்னாரு. அதுக்கு கலெக்டர்கிட்ட சொல்லிட்டேன். சாலை வளர்ச்சித் திட்டத்திலே அத சேத்து ரெண்டு மூணு மாசத்திலயே செஞ்சுர்றதா நம்ம கலெக்டர் ஏத்துக்கிட்டு இருக்காங்க.
சுசீலா: தலைவர் அவர்களே. நான் பேசலாமா?
சிந்தாமணி: பேசுங்க
சுசிலா: சுடுகாட்டுப் பாதை திட்டத்தை ஏகமனாதா நிறைவேத்தலாம்ணு சொல்லிக்க விரும்பறேன்.
செவத்தான், நாராயணன், காத்தவராயன்: (மூவரும் ஒரே குரலில்) கூடாது. ஓட்டுக்கு விடணும். ஓட்டுக்கு விடணும். (குரல்கள் சிறிது சிறிதாக உயர்ந்து ஒலிக்கின்றன) ஓட்டுக்கு விடு. ஓட்டுக்கு விடு.
(சுசீலாவும் சிந்தாமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். டீக்கடைக்கார்ர் ஒருவர் கதவின் அருகே வந்து நிற்கிறார். சிந்தாமணியும் சுசீலாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்க்கின்றனர்)
சிந்தாமணி: (டீக்கடைக்கார்ர் சுகவனத்தைப் பார்த்து) என்ன வேணும் சுகவனம்? காப்பி கொண்டாந்திருக்கீங்களா?
டீக்கடைக்கார்ர்: அது ரெடியா இருக்கும்மாவந்து சுசீலாம்மா புருசன் வெளிலே நிக்கறாரு அர்ஜண்டா அவங்களப் பாக்கணுமாம்.
சுசீலா: (நாற்காலியை விட்டு எழுந்து) ஓட்டெடுப்ப ஒரு அஞ்சு நிமிசம் நிறுத்தி வெக்கணும்ணு கேட்டுக்கறேன். தோ வந்துடறேன் (வெளியேறு முன் சிந்தாமணியைப் பார்த்துத் தலையசைக்கிறாள்)
சிந்தாமணி: சீக்கிரமா வந்துரணும் (டீக்கடைக்காரரைப் பார்த்து) நீங்க காப்பி கொண்டாங்க (உறுப்பினர்கள்   பக்கம் திரும்பி) காப்பி வருது. சாப்டுட்டுத் தீர்மானத்தை ஓட்டுக்கு விடலாம்.
செவத்தான்: அதென்னம்மா அது? அவங்க கூட்டத்துக்கு நடுவாந்தரத்திலே எழுந்து போறாங்க. அவங்க வர்றதுக்காக ஓட்டெடுப்ப நிறுத்தணும்ங்கறீங்க?
சிந்தாமணி: நான் நிறுத்தச் சொல்லல்லியே. காப்பிய சாப்டுட்டு உற்சாகமாக நடத்தலாமே
(டீக்கடைக்காரர் ஒரு பெரிய அலுமினியத் தட்டில் காப்பி டபராக்களை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார்)
(பஞ்சாயத்துக் கட்டிடத்தின் வெளிப்புறம் டீக்கடைக்கு எதிரே சுசீலாவும் அவள் கணவ னும் பேசிக் கொண்டு நிற்கின்றனர். சுசீலா முகத்தில் பதற்றம்)
சுசீலா: என்னங்க ஆச்சு? சிவப்பிரகாசம் வந்தாத்தான் மெஜாரிட்டி தீர்மானத்த நெறவேத்த முடியும். கையோட இட்டாரேண்ணு போனீங்களேஎன்ன சொல்றாரு அந்த ஆளு?
பொன்னையன்: அப்பவே  களம்பிட்டாரு. இத நீ போ பின்னாலயே வர்றேண்ணு சைக்கிள் எடுத்தாரே, எங்கண்ணு முன்னால….
சுசீலா: படுபாவிங்க வழியில மடக்கிட்டாங்களா?
பொன்னையன்: அவருக்கு எல்லா வெவகாரமும் தெரியும். குறுக்கு வழியிலே வந்துடுவாரு
சுசீலா: இன்னும் காணமே (சாலையைப் பார்க்கிறாள்)
பொன்னையன்: (திரும்பி நேர் எதிர்த் திசையில் பார்த்தவள்) தோ,பார்றீ அரக்கப் பறக்க சைக்கிள் மிதிச்சுட்டு ஓடியாறாரு
சிவப்பிரகாசம்: (மூச்சு வாங்க அவர்களை நெருங்கி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபடி) “கூட்டம் முடிஞ்சிருச்சா?“
சுசீலா: அப்பாடா…. வந்து சேந்தீங்களே சாமி! இல்ல முக்கியமான கட்டத்துல தான் வந்திருக்கீங்க.. இனிமேதான் ஓட்டெடுப்பு. கரெக்டா வந்துட்டீங்க. இனிமேதான் ஓட்டெடுப்பு. கரெக்டா வந்துட்டீங்க. . சட்டுணு போயி நடவடிக்கைப் புத்தகத்திலே கையெழுத்துப் போடுங்க.
(காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் வருகையைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர்)
செவத்தான்: (அருகில் உள்ள நாராயணனிடம்) ஏம்பா, அதெப்படி இவன் தீர்மானத்த ஓட்டுக்கு வுடறப்ப கரெக்டா  வந்து நிக்கறான்? ஆளவுட்டுத் தருவிச்சிருக்பாளா?
நாராயணன்: (அடங்கிய குரலில்) என்ன நடக்குதுண்ணு பாத்துரலாமே
சிவப்பிரகாசம்: மன்னிக்கணும் நெலத்திலே டிராக்டர் ஓட்டிருந்தாங்க. ரிப்பேர். அதான் லேட் ஆய்டுச்சு (வேகமாக கிளர்க்கை நெருங்கி  உறுப்பினர் வருகைக் குறிப்பில் கையெழுத்து போடுகிறார்)
(சுசீலா உள்ளே வருகிறாள். டீக்கடைக்கார்ர் உறுப்பினர்கள் குடித்துவிட்டு வைத்த கிளாஸ்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது  சிந்தாமணியும் சுசீலாவும் ஒருவரை ஒருவர் வெற்றிப் பார்வை பார்த்துக் கொள்கின்றனர். டீக்கடைக்காரர் வெளியேறுகிறார்)
சிந்தாமணி: ஓட்டெடுப்பை ஆரம்பிக்கலாமா?
அனைவரும்: ஆரம்பிக்கலாம்
சிந்தாமணி: குரல் ஓட்டு மூலமே நடத்திடலாம்ணு நெனக்கறேன்
நாராயணன்: ஆமாம்…. அப்படியே செய்யுங்க.
சிந்தாமணி: சுடுகாட்டுக்கு ரோடு போடற திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க கையை உயர்த்தலாம்.
(சிவப்பிரகாசம் உட்பட ஏழு கைகள் உயர்கின்றன. கிளார்க் கைகளை எண்ணி குறிப்பில் எழுதிக் கொள்கிறார்)
சிந்தாமணி: எதிர்க்கிறவங்க கையை உயர்த்தலாம்
(ஆறு கைகள் மட்டும் உயர்கின்றன. கிளார்க் கைகளை எண்ணி குறிப்பில் எழுதிக் கொள்கிறார்.)
சிந்தாமணி: இந்த சுடுகாட்டு ரோடு போடற திட்டத்துக்கு ஆதரவா ஏழு ஓட்டு எதிர்த்து ஒரு ஓட்டு. தலைவிங்கற முறையில என் ஓட்டையும் ஆதரவுக்குப் போடறேன். ஆக எட்டு ஓட்டு. பெரும்பான்மை ஓட்டுக்கள் வாங்கி இந்தத் தீர்மானம் நிறைவேறுது.
(சில கைதட்டல்கள் ஒலிக்கின்றன)
செவத்தான்: சே! கவுத்துட்டாண்டா சிவப்பிரகாசம்
நாராயணன்: வடிவேலு (ரகசியக் குரலில்) இப்ப குடிநீர் ஓவர் டாங்க் கட்டற திட்டத்தையும், மரக் கண்ணு நட்டு வளர்க்கிற தீர்மானத்தையும் இவ கொண்டாந்து ஜெயிச்சுடுவா!
வடிவேலு: என்ன பண்ணுவம்?
காத்தவராயன்: நாராயணா நீ எழுந்து எங்களுக்கு அவசர வேலை இருக்கறதால பஞ்சாயத்துக் கூட்டத்த ஒத்தி வக்கணும்ணு சொல்லு.
நாராயணன்: அதான் சரி. இவள இத்தோட மடக்கிடணும்
சிந்தாமணி: அடுத்து மேல் நிலைக் குடிநீர்த் தொட்டி  கட்டற தீர்மானம். இதை ஏழாவது வார்டு உறுப்பினர் சுசீலா முன் மொழியறாங்க.
நாராயணன்: (எழுந்து நின்று) கூட்டத்த இத்தோட ஒத்தி வக்கணும். அவங்கவங்க நெலத்துல ஏர் ஓட்ற டயம். நாங்கள்ளாம் எங்க வேல வெட்டிய உட்டுட்டு ஒக்காந்து பேசிட்டிருக்கோம். சிவப்பிரகாசம் ஹாய்யா நெலத்தில டிராக்டர் ஓட்டிட்டு வந்து ஓட்டுப் போட்டுட்டாரு.
காத்தவராயன்: (எழுந்து) ஆமா….. கூட்டத்த ஒத்தி வக்கணும்.
(பழைய பிரசிடெண்ட் கோஷ்டி ஆட்கள் ஒருவர் மாற்றி ஒருவர் எழுந்து கூட்டத்தை ஒத்தி  வை. கூட்டத்தை ஒத்தி வைஎன்று உரத்த குரலில் கத்துகின்றனர். சிந்தாமணியும் சுசீலாவும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். கூட்டம் சலசலப்பில் தொடங்கி கூட்டத்தை நடத்து என்று எதிர்க் குரல்கள் வலுக்கவேஇது சச்சரவில் முடியும் நிலை வந்துவிடும் என்று புரிந்து கொள்கிறாள் சிந்தாமணி.
சிந்தாமணி (எழுந்து நின்று) மெஜாரிட்டி ஓட்டுப்படி நிறைவேறிய சுடுகாட்டு ரோடு போடும் திட்டத்தோடு மறு தேதி குறிப்பிடாம இந்தக் கூட்டத்தை ஒத்தி  வைக்கிறேன்
(ஐயாக்கண்ணு சார்பு ஆட்கள் ஆறுபேரும் கை தட்டி ஆரவாரிக்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக கலைந்து செல்கின்றனர். இறுதியில் சிந்தாமணியும் சுசீலாவும் மட்டும் நிற்கின்றனர்)
சுசீலா. என்ன சிந்தாமணி. கூட்டத்த ஒத்தி வச்சுட்டே?
சிந்தாமணி: சுடுகாட்டு ரோடுத் தீர்மானம் ஜெயிச்சுட்ட வெறியில அவங்க முறுக்கிட்டு நிக்கறாங்க. அப்பறம் ரெண்டு தீர்மானம் கொண்டு வந்தா கட்டாயம் கலகம் பண்ணுவாங்க. இரு கொஞ்சம் வுட்டுப் புடிப்போம்.
சுசீலா: சரி அதுவும் சிந்தாமணி! பஜனைக் கோவில் தெருவுல தெரு வௌக்கு எரியலேன்றாங்க. அந்தப் புகார வச்சுப் பெரிசு படுத்துவாங்க.
சிந்தாமணி: இத  நேரா லைன்மேனப் பார்க்கத்தான் கௌம்பிட்டிருக்கேன்?
 ( வெளியே நிற்கும் டிவிஎஸ் 50 நெருங்குகிறார்கள்)
[தொடரும்]