காட்சி 1
மாங்குடி கிராமம். காலை மணி ஏழு. பால்கேனைச் சைக்கிளில் பின்னால் கட்டிச் செல்லும் இருவர். சோளத் தட்டைக் கட்டுகளை ஏற்றியபடி கடக்கும் இரட்டை மாட்டுவண்டி. எதிரும் புதிருமாக காமிராவின் எதிரே அவை கடந்து சென்ற பின் ஒரு சைக்கிளின் பின் ஸீட்டில் நிறைய பிளாஸ்டிக் குடங்களைக் கட்டி மிதித்தபடி ஒரு பிளாஸ்டிக் குடம் விற்பவன் வருகிறான்.
சைக்கிள் மணியை அடித்துக் கொண்டே அவன் கூவிச் செயல்கிறான். “பிளாஸ்டிக் கொடம்….. பிளாஸ்டிக் கொடம்“
மாங்குடி கிராமப் பஞ்சாயத்துத் தலைவி வீடு வெளியே ஒரு டிவிஎஸ் 50 நிற்கிறது. உள்ளே இருந்து சிந்தாமணியின் மாமியார் மீனாட்சி (வயது 55)
வெளிவந்து கைதட்டிக் கூப்பிடுகிறாள்.
மீனாட்சி: ஏம்பா கொடங்காரே!
சைக்கிளில் இருந்து அவன் இறங்கித் தள்ளிக் கொண்டு வருகிறான்.
தெருவில் போகும் ஒருத்தி: என்ன எக்கா ஒங்க ஊட்லயும் கொடம் ஒடஞ்சிருச்சா?
மீனாட்சி: எனக்கு இல்லம்மா ஆப்பக்காரி கோவிந்திக்கு. அவ காலையிலே கூலிக்குப் போறப்ப வந்து ஒரு கொடம் வாங்கி வக்கச் சொன்னா.
தெருவில் நிற்பவள்: நம்ம ஊர்ல எந்த பொருள் வியக்குதோ விக்கலியோ பிளாஸ்டிக் கொடஙகாருக்கு மட்டும் டிமாண்டு தான் பாரேன் பிரசிடெண்ட் அம்மா மாமியாரே நிக்கவச்சு கொடம்வாங்றாங்க.
பிளாஸ்டிக் குடம் விற்பவர்: ஏம்மா நீ என் பொழப்பிலே மண்ணை வாரிப் போடறே?
மீனாட்சி: எங்க ஊரு வளமுறை அப்படி! ரெண்டு கல்லு தொலவு நடந்து தண்ணி எடுத்துட்டு வரணும். இப்பத்தான பிளாஸ்டிக் வந்திருக்கு. எங்க காலத்தில நாங்க பித்தள கொடமும் மண் கொடமும் சொமந்திருக்கோம்.
தெருவில் நிற்பவள்: மண் கொடமும் பித்தளக் கொடமும் மாறி பிளாஸ்டிக் குடம் வந்தாச்சு. எலக்சன் எலக்சனா நடந்துது. பெரெசடண்ட் பெரசடண்டா வந்தாங்க போனாங்க……. இப் ஒம் மருமவ பெரசடண்டாயிருக்கா….
இன்னமும் நாங்க தல மேல கொடம் தூக்கி நடையாத்தான் நடக்கறோம். தண்ணிக்கு.
(வீட்டுக் கூடத்தில் சிந்தாமணி நின்றவாறே பாலை ஒரு டபரா செட்டில் ஆற்றுகிறாள். கம்பத்தின் கீழே முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து முகம் பார்த்தபடியே சிந்தாமணியின் கணவன் முத்துசாமி ஷேவிங் செய்து கொண்டிருக்கிறான். அவர்களது பெண் குழந்தை நிர்மலா சுவரில்சாய்ந்தவாறு அமர்ந்து ‘ஹோம் ஒர்க்‘ பாடத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள்.
சிந்தாமணியின் மாமனார் வீராசாமி (வயது 60) ஒரு குடையை விரித்து வைத்து ஒரு கட்டிங் பிளேயரால் கம்பி போட்டுக் கட்டு விட்டிருந்த பகுதியைக் கோர்த்து முடித்து விட்டு அதை விரித்து மூடி சரிபார்க்கிறார். அவர் முகத்தில் ரிப்பேர் முடிந்த திருப்தி)
சிந்தாமணி:
(மாமனாரைப் பார்த்து) மாமா. பொழக் கடையிலே வெந்நி அண்டா காஞ்ச சத்தம் போடுது. நீங்க குளிச்சிட்டு வந்துர்றீங்களா?
வீராசாமி: ஏம்மா காலங்காத்தால என்னைப் போட்டு வெரட்ற?
சிந்தாமணி:
இல்லே அப்புறம் நிர்மலா குளிக்கணும். ஸ்கூலுக்கு நேரமாயிடும். இவங்க ஷேவிங் பண்ணிக்கிறாங்க. அவங்க குளிச்சப்பறம் நான் குளிச்சுட்டு ரெடியாகணும். இன்னிக்கு பஞ்சாயத்து போர்டு மீட்டிங் இருக்கு!
வீராசாமி: வேணும்னா நீ போய் மொதல்ல குளிச்சுட்டு கௌம்பு (சொல்லிக் கொண்டே குடையை ஒரு தரம் மடக்கி விரித்து மடக்கிச் சரிபார்க்கிறார்)
பெரிய பஞ்சாயத்து போர்டு மீட்டிங். தோ, வெளிய பிளாஸ்டிக் கொடம் வாங்கறவ வுட்டாளே டோஸு. காதுல வுழுவலே.
(சிந்தாமணி திரும்பி அவரை ஒரு முறை முறைத்து விட்டு நகர்ந்து வந்து தெருவைப் பார்க்கிறாள்.
குழந்தை நிர்மலா அவளையும் தாத்தாவையும் மாறி மாறிப் பார்த்து விட்டு மீண்டும் ஹோம் ஒர்க் வேலையில் ஈடுபடுகிறாள்.)
சிந்தாமணி:
நிர்மலா, வா……. பால் ஆறிப்போச்சு. வந்து குடிச்சுட்டுப் போய் எழுது. (கணவன் முத்துசாமி பக்கம் திரும்பி) ஏங்க, ஒங்க ஷேவிங் முடிஞ்சுதா? நீங்களாவது போய் குளிச்சுட்டு வாங்க.
முத்துசாமி:
ஷேவிங் பாதி ஆயிருக்கு. இனிமே தான் பல் தேய்க்கணும். நீ ஏன் என்னை வெரட்டறே?
வீராசாமி: இதுக்கு தான் நான் தலபாடா அடிச்சுக்கிட்டேன் . குடும்பத்துப் பொண்டுகளுக்கு தலைவர்பதவி லீடர் வேலைல்லாம் வேணாம்டா. அடக்க ஒடுக்கமா சமைச்சமா போட்டமா குடும்ப நிர்வாகத்தப் பாத்தமாண்ணு இருக்கவுடுடாண்ணேன். கேட்டியா நீயி?
முத்துசாமி:
இப்ப என்ன நடந்து போச்சுண்ணு இப்படி ரேங்கறீங்க? ஒண்ணு நீங்க போய் வெந்நில
குளிங்க. இல்லே நான் போறேன். சுடுதண்ணிக்கும் தலைவர் பதவிக்கும் என்னா தொடுப்பு?
வீராசாமி: பொழுது விடிஞ்சதும் பொதுச் சேவைக்கு எப்ப போலாம்ணு பதைக்கிறாளே ஒம் பொஞ்சாதி. அப்படி பொதுச் சேவ பண்ணி என்ன கிளிச்சோம்? வெளிய பாரு கேக்கறாளே ஒருத்தி ஒரு கேள்வி. எந்த பெரசண்டு வந்தாலும் கொடம் தான் தூக்கறோம்ணு. இது நன்னி கெட்ட கூட்டம்யா! இதுக்கு ஏன் நாம லோல் படணும்?
சிந்தாமணி:
மாமா, ஒங்களுக்கு யார் மேல கோவம்?
வீராசாமி: இது என்னா கேள்விம்மா?
சிந்தாமணி:
இல்ல… எம் பேர்லயா? பஞ்சாயத்துத் தலைவர் பதவி பேர்லயா? பெண்கள் பேர்லயா? கிராமத்து சனங்க பேர்லயா?
வீராசாமி:
(குடையை ஒரு மூலையில் சாய்த்து விட்டு) ஊம்ம்….. காஞ்சி கொதிச்சுட்டிருக்கே அந்த வெந்நி அண்டா… அதும் பேர்லதான்! (கொடியில் தொங்கும் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு புழக்கடைக்கு நடக்கிறார்)
(சுவரில் சாய்ந்து ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த நிர்மலா தாத்தா போவதைப் பார்த்து பீறிட்டுக் கொண்டு வரும் சிரிப்பை அடக்க வாயை மூடிக்கொள்கிறாள்.
அப்போதும் சிரிப்பு பொங்கி வருகிறது.)
சிந்தாமணி:
(கையில் பால் தம்ளருடன்) ஏய் அவதாரம்! என்ன கொளுப்பு தொண்டையில் முட்டுதா? சிரிப்பு என்ன வேண்டிக் கெடக்குது? வா, இந்தப் பாலை வாங்கிக் குடி.
(ஹோம் ஒர்க் நோட்டை வைத்துவிட்டு அவளையே பார்த்தபடி எழுந்து வருகிறாள் குழந்தை நிர்மலா. ஷேவிங் செய்தவாறே குழந்தையையும் சிந்தாமணியையும் மாறி மாறிப் பார்க்கிறான் முத்துசாமி. குழந்தை கடகடவென்று மருந்து குடிப்பதைப் போல ஒரே மூச்சில் பாலைக் குடித்துவிட்டு ‘நக்‘கென்று டம்ளரை சத்தத்துடன் கீழே வைத்துவிட்டு புழக்கடைக்கு ஓடுகிறது)
முத்துசாமி:
(மீண்டும் ஒரு முறை கன்னத்தில் சோப்புத் தேய்த்தபடியே) நீ ஏன் கொழந்தை கிட்டயும் ஒம் பிரசிடெண்ட் ஜபர்தஸ்தக் காட்டறே?::::
(கொடியில் இருந்த புடவையை உதறி மடித்துக் கொண்டே திரும்பிப் பார்க்கிறாள் சிந்தாமணி அவளது புருவம் நெறிகிறது)
சிந்தாமணி:
ஆச்சு. நீங்க ஒருத்தர்தான் பாக்கியா இருந்தீங்க. நான் பிரசிடெண்ட் ஆய்ட்டேன். பிரசிடென்ட் ஆயிட்டேன்னு குத்திக்காட்டறதுக்கு. இப்ப அந்த கொறையும் நீங்கிப் போயிடுச்சு. ச்சே! என்ன மனுசங்கப்பா.
(மடித்த புடவையை பீரோவிற்குள் வைத்தபடியே சிந்தாமணி பேசுகிறாள்)
இப்ப எவ இந்த பிரசிடெண்ட் பதவி இல்லேண்ணு அழுதா? தேர்தல்ல நான் நிக்கிறேன். நான் நிக்கிறேன்னு எவ தவிச்சா? சும்மா கெடந்த சங்கெ ஊதி உசுப்பேத்தி நிக்க வைச்சுட்டு மூச்சுக்கு ஒரு தரம் இப்ப குத்திக் குத்திக் காட்ட வேண்டியது.அப்பா புள்ளைண்ணு குடும்பமே….. (லேசாக அவள் குரல் கம்முகிறது) ச்சே!
(ஷேவிங் கப்பில் ஷேவிங் செட்டை நீரில் மூழ்க வைத்து அலப்பிக் கொண்டே திரும்பிப் பார்க்கிறான் முத்துச்சாமி.
அவன் முகம் சுருங்குகிறது)
முத்துசாமி:
ஏய்….. அழுவறியா?
சிந்தாமணி:
ஆமா…… அது ஒண்ணு வேற மிச்சம் இருக்கு இல்லே. அழுதுற வேண்டியதுதான். அப்ப தானே எல்லாருக்கும் திருப்தி. ஆகா அடக்கிட்டம்டா இவளண்ணு ஆறுதல் வரும்!
முத்துசாமி:
(ஷேவிங் சாமான்களுடன் எழுந்தபடியே) இன்னிக்கு நீ விதண்டாவாதம் பண்றதுண்ணே கங்கணம் கட்டிட்ட போலிருக்கு.
சிந்தாமணி:
ஆமா நீங்க குத்திக் காட்டறாப்பிலே பேசுவீங்க. அதை எடுத்துக் காட்டினா அது வெதண்டாவாதம்!
(மீனாட்சி கையில் ஒரு பிளாஸ்டிக் குடத்துடன் உள்ளே வருகிறான். குடத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே வரும் அவள் சிந்தாமணியை நெருங்கி)
மீனாட்சி: ஏம்மா சிந்தாமணி, இந்தக் கொடத்த பதினெட்டு ரூபாய்க்கு வாங்கலாமா பாரு! (குடத்தை நீட்டுகிறாள் அவளிடம்)
சிந்தாமணி:
(குடத்தைக் கையில் வாங்கியபடியே) நம்மவூட்டுக்கா அத்தே? அதான் மூணு கொடம் இருக்கே?
மீனாட்சி: நமக்கு இல்லம்மா! நம்ம கோவிந்தி வாங்கிவைக்கச் சொன்னா (அவளைக் கூர்ந்து கவனிக்கிறாள். பிறகு) ஏன் ஒம் மூஞ்சி வாட்டமா இருக்கு? முத்துசாமி எதானா சொன்னானா?
சிந்தாமணி:
அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தே! குடத்தை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு) வாங்கலாம் அத்தே! பதினெட்டு ரூபா பெறும். (குடத்தைத் திருப்பி அவள் கைக்கு நீட்டி) ம்ம்ம்…… நம்ம ஊரு பொம்பளங்க இப்படி கொடந்தூக்கி தண்ணிக்கு நடையா நடக்கற தொல்லைக்கு இந்த வருசமாவது ஒரு முடிவு கட்டணும் அத்தே!
மீனாட்சி: தெருவுல வேலாயி பேசுனது காதுல உளுந்துடுச்சா? அதான் ஒம் மொகம் வாட்டமாயிட்டுது. அவ கெடக்கிறா உடும்மா….. அவளுங்களுக்கு நம்மள மாதிரி ஒரு பொட்டச்சி பெரசிடண்டாயிட்டாளேண்ணு வவுத்தெரிச்சல்.
சிந்தாமணி:
அது வவுத்தெரிச்சலோ வக்கணயோ. ஆனா அது மெய் தானே அத்தே! எத்தினி எலக்சனு…. வந்துது.
எத்தினி தலைவருங்க,
வந்தாங்க போனாங்க. குடிக்கத்
தண்ணி இல்லியே…. அந்தம்மா சொன்னது சாட்டையில அடிச்சா மாதிரி இருக்கு பார்ப்போம் அத்தே. இன்னிக்கு ஒரு பஞ்சாயத்துக் கூட்டம். அதுல இதுக்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டு வக்கத்தான் போரேன்!
மீனாட்சி: செய்யிம்மா, எவங்கவுங்களோ தலைவருங்களா வந்து தீக்காத பிரச்சனய எம் மருமவ தீத்தாண்ணு நான் கெருவத்தோட தலை நிமிந்து நடப்பேன்.
சிந்தாமணி:
இருக்கட்டும் அத்தே! பாப்பம். அடுப்பிலே இட்லிப் பாத்திரத்த ஏத்தி வச்சுட்டு வந்திருக்கேன். இந்நேரம் வெந்திருக்கும்.
கொஞ்சம் சட்னிக்கு அரைச்சுட்டு வந்துர்றேன்.
மீனாட்சி: நீ அரச்சுட்டு வா! நான் இட்லிப் பானையை எறக்கறேன்.
(மீனாட்சி உள்ளே போகிறாள். பிரஷ்ஷில் பற்பசையைத் தடவிக் கொண்டு வரும் முத்துசாமி. கையில் ஒரு தட்டில் கடலை, தேங்காய், பச்சை மிளகாயோடு அம்மியில் சட்னி அரைக்கச் செல்லும் சிந்தாமணி முன் எதிர்ப்படுகிறாள்.)
முத்துசாமி:
பரவால்லம்மா ஒனக்கு மாமியார் சப்போர்ட் இருக்கு! ஜெயிச்சுடுவே எங்களை எல்லாம்!
சிந்தாமணி:
இதான் கிருத்திருமமங்றது. புள்ளையக் கிள்ளியும் வுட்டுட்டு தொட்டிலயும் ஆட்டறது! நீங்க சட்டுணு போய்க் குளிச்சுட்டு கெளம்புங்க. இன்னிக்கு இஞ்சினியரு வருவாரில்லே.
முத்துசாமி:
நீ சொந்த ஊருக்குப் பிரசிடெண்ட் ஆனாலும் ஆனே. ஊர் பொல்லாப் புக்குப் பயந்து வெளியூர்ல காண்ட்ராக்ட் எடுத்து அலச்சப் பொழப்பாப் போச்சு!
சிந்தாமணி:
அப்ப நான் என்ன பண்ணட்டும்? ஒங்களுக்காக பிரசிடெண்ட் பதவிய ராஜினாமா பண்ணிரட்டா? (சட்னி அரைத்துக் கொண்டே கேட்கிறாள்)
முத்துசாமி:
எம்மா நீ ஆளவுடு.
சிந்தாமணி:
அதான் நானும் சொல்றேன். எங்களக் கொஞ்சம் ஆள வுடுங்க.[தொடரும்]