இடிபாடுகள்
முன்னுரை
எங்கே நிற்கிறோம் என்பது ஒரு நிதரிசனம்தான் உண்மை! எனினும் எங்கே இருந்து வந்தோம் எப்படி எல்லாம் வந்தோம் என்ற ஞாபகங்கள் மறக்கக் கூடாதவை. இன்று நாம் நிற்கும் நிலைக்கு அவை உரம். அவை அஸ்திவாரம்.
நான் நமது வளர்ச்சியை, நாட்டின் வளர்ச்சியைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். நகர்மயமாதலும்,
நவீன வசதிப் பெருக்கங்களும் இன்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
ஒரு பக்கம் மகிழ்ச்சி, இந்த முன்னேற்றங்கள் கொண்ட வரும் பிரச்சினைகள் குறித்து ஒரு பக்கம் மருட்சி.
நமது சமூக அமைப்பிலும், காலங்காலமாக நமது மன மூலைகளிலும் ஏற்கனவே குவிந்து கிடக்கும் இடிபாடுகள் நாட்டின் மேற்படி வளர்ச்சியால் அகன்று விட்டனவா?
இல்லை.
மாறாக நம் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் யாவற்றுக்கும் நமது பழமையின் இடிபாடுகளே மூலகாரணங்கள் ஆகி நிற்கின்றன.
இந்த இடிபாடுகள் எங்கே குவிந்து கிடக்கின்றன? அவற்றை அகற்றும் முயற்சிகள் எங்கே இருந்து உதயமாகவேண்டும்?
இந்த இரு கேள்விகளுக்கும் காலம் நம் முன் வைத்திருக்கும் இரு விடைகள்---
கிராமம்,பெண்விடுதலை.
ஆம், இந்த இரு முனைகளில்தான் இடிபாடுகள் அகற்றும் சக்தி மையம் உள்ளது.
அந்த சக்தி மையத்தைக் கருவாக வைத்து எழுதிய நாடகம் இது.
நடிக்கப்படுவதனால் மட்டும் ஒரு கலைப் பிரிவு நாடகம் ஆகிவிடாது. நாட்டின் அகத்திலுள்ள பிரச்சினைகள் அதன் வழியே புலப்பட வேண்டும். அந்த பிரச்சினைகளை நீக்கும் ஒளியும் நாடகத்தின் வழியே புறப்படவேண்டும்.
நாடகம் குறித்து நான் ஏற்றுக் கொண்ட கருதுகோள்கள் இவை.
நாடகம் பிரச்சாரம் செய்யக்கூடாது.
இது கலை உணர்வுப் பிரிவினரின் வாதம். அது மகிழ்ச்சியூட்ட வேண்டும். குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைக்க வேண்டும். இது பாமர மக்கள் கருத்து. இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட வகையில் ஒரு நாடகம் இருக்கக் கூடாதா? கூடாது என்பது விதியானால் கூடும் என்பத எதிர்விதி. அதன் விளைவுதான் இது.
கிராமங்களில் தான் இன்னும் முக்கால் பகுதி இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அன்று காந்திஜி சொன்ன கூற்று இன்னும் நீடித்தே வருகிறது.
நமது கிராமங்களோ குடிநீர், சாலை வசதி, மின்சாரம், கல்வி என்ற பலப்பல அடிப்படைத் தேவைகளுக்கு அல்லாடுவதன் இடையே அழிந்தும் சிதைந்தும் மீண்டும் புத்துயிர் பெற்றும் நடத்தி வரும் போராட்டங்கள் மௌனமானவை மனதைப் பிழிகின்றவை.
அந்த உண்மையை உட்கிரகித்த்துக் கொண்டவள் தான்இந்த நாடகத்தின் கதாநாயகி சிந்தாமணி. அவள் பஞ்சாயத்துத் தலைவி ஆனபின், சில சமரசங்கள் செய்து கொண்டிருந்தாள்………
ஊர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நான் வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற சுயநல நோக்கம் பெற்றிருந்தால்…….
பதவியைப் பயன்படுத்தி அவள் அதிக வசதிகளைப் பெற்றிருக்க முடியும். அல்லது அவள் சந்திக்க நேர்ந்த ஜீவ மரணப் போராட்டங்களைத் தவிர்த்திருக்க முடியும்!
ஆனால்
--------
உடனடி வசதிகள், உழைக்காமல் பெறும் உல்லாசம் என்ற மாயைகளில் இருந்து சிந்தாமணி விலகி நின்றவள். தனது கிராம்ம் என்பது இந்தப் பரந்த பெருநாட்டின் ஏழு லட்சம் புள்ளிகளான கிராமங்களில் ஒரு சிறிய புள்ளி என்பதை உள்ளூர உணர்ந்து, அதேன் முன்னேற்றத்திற்காக உழைத்தவள்.
தலைமுறை தலைமுறையாக தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து நடந்த தன் கிராமத்துப் பெண்களின் கண்ணீர்த் துளிகளில் ஓரிரண்டையேனும் துடைக் முடியுமா என்று முனைந்து நின்றவ்வள், வெற்றியும் பெற்றவள்.
இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கும்போது ஊருக்காக வீட்டையோ குடும்பத்தையோ,
முற்றிலும் மறந்தோ துறந்தோ, விலகி வாழும் பெண்ணாக அவள் இருக்கக் கூடாது என்ற உள்ளுணர்வு என்னிடம் மேலோங்கி நின்றது. அது பாத்திரப் படைப்பிலும் பிரதிபலித்தது.
மணந்த கணவன், மாமனார் என்ற இரு ஆண் வர்க்கப் பிரதிநிதிகளையும் அவள் புத்திசாதுர்யத்தோடும், பெண்மைக்கே உரிய கனிவு மாறாமலும் அவள் திசை திருப்பினாள்.
சிந்தாமணி இலட்சிய வேகம் கொண்ட புதுமைப் பெண்தான். அதே சமயம் அவள் ஆண் வர்க்கத்தின் எதிரியாகிவிடவில்லை. அப்படி ஆகியிருந்தால் ஊரில் அவளுக்கு இளைஞர் நற்பணி மன்றத்தின் அதரவு கிடைத்திருக்காது. எடுத்த பணிகளில் வெற்றியும் கிட்டியிருக்காது.
இங்கே ஒரு நாடகக் கலை உத்தி பற்றி ஒன்றைக் கூற விரும்புகிறேன்.
அமரர் நவாப் எஸ்.ராஜமாணிக்கம் போன்ற பழைய தலைமுறை நாடகக் குழுவினரும், தோல்பாவைக் கூத்து நடத்துவோரும் பயன்படுத்திய திரை நிழல்கள் என்ற உத்தி மூலம் சில சிரமசாத்தியமான காட்சிகளை மேடைகளில் காட்டலாம்.
காட்ட இயலும். காட்டவேண்டும்.
காரணம் சினிமாவும்,தொலைக்காட்சியும் வலிமையான ஊடகங்களாகி விட்டன. மேடை நாடகங்களில் அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வலிமையைப் பெறவேண்டுமானால் சில புதிய உத்திகளைக் கையாள வேண்டும். இந்த எண்ணத்தோடு அந்த உத்தியில் இந்நாடகத்தில் இரு காட்சிகளை அமைத்துள்ளேன்.
இது நாடகமே இல்லை என்று நவீன மேற்கத்திய நாடக அளவுகோல் கொண்டு அளவிடும் சில விமர்சகர்கள் கூறக் கூடும். அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.
நான் புரிந்து புரியாத புரியாமலேயே, புரிய வைக்க முயல்கிற புதிர் விடுகதை நாடகத்தை எழுத முனையவில்லை.
படித்தாலோ,
நடித்தாலோ எளிதில் எவரும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த மூடு மந்திரமோ சூட்சும சூத்திரமோ இருக்கலாகாது என்று திட்டமிட்டு எழுதிய நாடகம் இது.
இந்த நாடகத்தின் வாசக விளைவாய் எந்த கிராமத்து மூலையிலோ ஒரு சிந்தாமணி உருவாக ஒரு சிறு பொறி, ஒரு சிறு உளித் தட்டல், ஒரு நீர்த் துளி
சிந்தித்தால் போதும். அதுவே இந்த முயற்சிக்குக் கிடைக்கும் பாராட்டு. வித்து விழுந்த நிலத்தில் ஒரு மொட்டு மலரும் பயன்பாடு.
இந்த நாடகத்தை
------------
நாடகங்களை நடிப்போரும் இல்லை; படிப்போரும் இல்லை என்று புறக்கணிப்போர் மத்தியில் துணிந்து வெளியிட்டிருக்கும் பதிப்பாளருக்கும் இதைக் கையில் எடுத்துப் படிக்க முனைந்திருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் கைகுவிப்பும் உரியன.
மிக்க அன்புடன்
சென்னை-20 வையவன்
No comments:
Post a Comment