காட்சி 2
நேரம்: காலை மணி 9
இடம்: சுசீலாவின் வீடு. ஒரு சுமாரான வசதி உள்ள சிறிய வீடு
பாத்திரங்கள்:
சிந்தாமணி சுசீலா (25 வயது) பொன்னையன் (30 வயது)
(சுசீலாவின் வீட்டிற்கு டிவிஎஸ் 50ல் வரும் சிந்தாமணி வண்டியைத் தெருவில் நிறுத்திப் பூட்டித் திரும்பும் போது வெளியே போகப் படி இறங்கும் சுசீலாவின் கணவன் பொன்னையன் அங்கேயே நின்றான்……...)
பொன்னையன்:
வாங்க பிரசிடெண்ட் அம்மா! எங்க இவ்வளவு காத்தால?
சிந்தாமணி:
சுசீலா இருக்காளா?
பொன்னையன்:
(சற்று வெறுப்பாக) இருக்கா…. இருக்கா
சிந்தாமணி:
எங்கேண்ணா…. வேலைக்குக் கௌம்பீட்டிங்களா? பேட்டையில் மிலிட்ரிக்காரு வூட்டுக்கு வர்ணம் பூசறாப்பிலயாமே! கேள்விப்பட்டேன்.
பொன்னையன்:
யார் சொன்னது?
சிந்தாமணி:
எங்க வூட்டுக்காரு அதே தெருவிலதான் வூடு கட்ற காண்ட்ராக்ட் எடுத்துருக்காரு.
பொன்னையன்:
ஆமாம்மா…. செஞ்சுகிட்டிருந்தேன். கூலி கட்டுபடி ஆவுல. பெய்ண்டலயே வாரம் முச்சூடும் இருந்தா ஜலுப்பு புடிச்சிட்டு ஒடம்பு கனத்துக்குது. அத வுட்டுட்டேன். அதுக்கு சுசீலா காச்சி மூச்சுணு கத்தறா. பஞ்சாயத்து மெம்பரா ஆயிட்டோம்ணு அவளுக்கு ஒரு பவுசு கூடிப்போச்சு. கொஞ்சம் சொல்லிவைம்மா. நான் வரட்டா?
(சிந்தாமணி சிரித்து விட்டு படியேறி உள்ளே போகிறாள். உள்ளே வாசலில் மிளகாய் வற்றலை வெயிலில் காய வைத்துக் கிளறி விட்டுக் கொண்டிருக்கும் சுசீலா காலடியோசை கேட்டுத் திரும்புகிறாள்.)
சுசீலா: (முகத்தில் புன் சிரிப்புடன்) வா சிந்தாமணி. இப்பதான் ஒன்னப் பத்தி நெனச்சேன். நீ வந்து நிக்கறே!
சிந்தாமணி:
(வாசலில் இறங்கிக் காய வைத்திருக்கும் மிளகாயை அள்ளிக் கையில் தூக்கிப் பார்த்த படியே) நல்லா தேறின ஐட்டம் சுசீலா…. தோட்டத்துல வௌஞ்சதா சந்தையில வாங்கினதா?
சுசீலா: தோட்டத்தத்தான் குத்தகைக்குக் குடுத்துட்டமே. எங்க ஆளு புண்ணாக்கு வியாபாரம் பண்ண மொதல் வேணும்ணு கேட்டாரு. ஒடம்பு வளஞ்சு பாடுபட முடியாததுக்கு அப்வே தோட்டம் கைய வுட்டுப் போயிடுச்சு. சந்தைல வாங்கினது தான்.
சிந்தாமணி:
என்ன நீ? பஞ்சாயத்து மெம்பராயிட்டோம்ங்கற பவர்ல அவர ரொம்ப தெராட்டல் வாங்கறியாமே?
சுசீலா: அவரு சொன்னாரா?
சிந்தாமணி:
இத இப்பதான் படி எறங்கிப் பேசிட்டுப் போனாரு.
சுசீலா: அவரு சொன்னரா?
சிந்தாமணி:
இத இப்ப தான் படி எறங்கிப் பேசிட்டுப் போனாரு
சுசீலா: புண்ணாக்கு வியாபாரத்தத் தலை முழுகிட்டுப் பெயிண்டிங் வேல பண்றேண்ணு மூணு மாசம் மூச்சுப் படித்துப் பார்த்தாரா….. இன்னிக்கு ஒடம்புக்கு முடியலியாம்.. கூலி கட்டாதாம்…. கௌம்பிட்டாரு. டீக்கடைல கத பேசிட்டுச் சாராயக் கடையோ, சலூன் கடையோ அரசியல் பேசணும்ல? கட பெஞ்சுகள்லே ஒக்காந்துப் பேசி நாட்டைக் கரை ஏத்த வாணாம்? கௌம்பிட்டாரு. கேட்டா மெம்பருங்கற திமிராடீங்கறாரு.
சிந்தாமணி:
வூட்டுக்கு வூடு வாசப்படி தான்.
சுசீலா: (திகைப்போடு திரும்பி) நீ இன்னா சொல்றே? முத்துசாமி அண்ணன் வேலண்ணு வந்துட்டா வெயில் மழை, ராவு பகல் பாக்க மாட்டாரே!
சிந்தாமணி:
நான் அதச் சொல்லலே. நீ மெம்பராயிட்ட திமிருடீண்ணு என்னப் பாத்து எங்க பொன்னையண்ணன் கேக்கறாப்பிலே பிரசிடெண்ட் ஆயிட்டயாண்ணு மாமனாரு ரேங்கறாரு….. இவரு முறுக்கறாரு.
சுசீலா: இவங்க தான நிக்க வச்சவங்க?
சிந்தாமணி:
ஆமா. அதான் ஆம்பள கொணம்! இவங்களே தூக்கி விட்டுட்டு அட்டா ஒசந்துட்டாளேண்ணு கருவுவாங்க. அது கெடக்கட்டும் தள்ளு. இன்னிக்கு பஞ்சாயத்து மீட்டிங்
சுசீலா: அதான் சொல்ல வந்தேன். இவங்க எல்லாருக்கும் இருக்குதே பொம்பளைங்கற எளப்பம். அதை மட்டம் தட்டறாப்பிலே நாம சாதிச்சுக் காட்டிடணும்.
சிந்தாமணி:
இன்னிக்குப் பஞ்சாயத்துக் கூட்டத்திலே வரப் போறது முன்ன நாம பேசிக்கிட்டமே அந்த மூணு தீர்மானம்.
சுசீலா: குடி தண்ணீர் ஓவர்டாங்க் கட்டறது. சுடுகாட்டுக்கு ரோடு போடறது. பஸ் ரோட்டுச் சாலையோரம் மரக்கண்ணுங்க வைக்கறது இதுங்கதானே.
சிந்தாமணி:
ஆமா…… இதுல ஓவர் டாங்க் தீர்மானத்துக்குப் பெரிய எதிர்ப்பு வரும்ணு னெக்கறேன்.
சுசீலா: அதுக்கு மட்டுமில்லே. சுடுகாட்டு ரோடுத் தீர்மானத்துக்கும் பெரிய எதிர்ப்பு வரும்.
சிந்தாமணி:
எப்படிச் சொல்றே?
சுசீலா: (எழுந்து ஒரு இரும்புச் சேரை இழுத்துப் போட்டு விட்டு) நீ ஒரு அஞ்சு நிமிஷம் ஒக்காரு. பொழக்கடையில
துணியத் தொவச்சு அப்படியே வாளியிலே உட்டுட்டு வந்துட்டேன், காயப்போட்டு வந்துர்றேன்.
சிந்தாமணி:
(உட்காராமல்) துணி
தானே காயப் போடப் போற…… வா….. அங்க போயிப் பேசிக்குவம்.
(இருவரும் புழக்கடைக்குச் செல்லும் நடை வழியே நடந்து கொண்டே பேசுகின்றனர்)
சிந்தாமணி:
நீ எத வச்சு சுடுகாட்டு ரோடு விசயத்தில் எதிர்ப்பு வரும்ணு சொல்றே?
சுசீலா: மங்களா சொன்னா
சிந்தாமணி:
யாரு நம்ப பழைய பிரசிடெண்ட் ஐய்யாக் கண்ணு மருமகளா?
சுசீலா: ஆமா
சிந்தாமணி:
எப்ப?
சுசீலா: முந்தா நாளு மாரியாத்தா கோயிலுக்கு நான் பொங்கல் வெக்கப் போயிருந்தேன். அவளும் வந்திருந்தா.அவ நாம மூணு பெரும் ஒண்ணா ஸ்கூல்ல படிச்சத இன்னம் மறக்க லேடீ சிந்தாமணி!
சிந்தாமணி:
என்ன சொன்னா?
சுசீலா: என்ன சொல்லுவா? இந்த துரியோதனக் கூட்டத்திலே சிக்கி வாக்கப்பட்டு போனதால வாயடச்சி நிக்கிற கொடுமயத்தான் பொலம்பினா.
சிந்தாமணி:
தீர்மானத்தப் பத்தி என்ன சொன்னா?
சுசீலா: சொல்றேன் (வாளியில் முறுக்கி வைத்திருந்த ஈரத் துணிகளை உதறி உதறி நீவிவிட்டுக் காயப்போட்டுக் கொண்ட வாறே) சுடுகாட்டுக்கு இவ எப்படி ரோடு போட்டுள்றாண்ணு பாக்கறேண்ணு குதிக்கிறானாம் மருதப்பன்
சிந்தாமணி:
யாரு மங்களா புருஷனா?
சுசீலா: ஆமாம்
சிந்தாமணி:
என்ன பண்ணிடுவானாம்?
சுசீலா: சுடுகாட்டு ரோடு வேலய அவ ஆரம்பிச்சா போகப் போற மொதல் பொணம் சிந்தாமணி பொணம் தான் கத்தினானாம்.
சிந்தாமணி:
முகத்தில் கம்பீரம் தோன்ற) அப்படீண்ணு மங்களா சொன்னாளா?
சுசீலா: சொல்லிட்டு கண்ணுல தண்ணி வுட்டுட்டா. நம்ம மூணுபேர்ல அவ ஒருத்தியாவது சந்தோசமா பொளச்சுட்டிருக்கா. அதுக்கும் குளி தோண்டப் பாக்கறாங்களேண்ணு கலங்கிட்டா.
சிந்தாமணி:
(யோசனையோடு சுசீலாவைப் பார்த்தபடி) சுடுகாட்டு ரோடு வெவகாரத்தில மருதப்பனுக்கு என்னா இவ்வளவு காரம்?
சுசீலா: சுடுகாட்டுக்குப் பக்கத்தில தானே அவங்க சாராயம் காச்சற எடம். அதோட ஒரு கல்லு தள்ளிப் போனா காட்டுல இருந்து திருட்டு மரம் கடத்திட்டு வந்து குமிச்ச வக்கிறாங்க. ராவோடு ராவா கல்லோ முள்ளோண்ணு பாக்காம லாரி வந்து ஏந்திட்டுப் போயிடுது. நீ ரோடு போட்டு வௌக்கு போட்டு வச்சா எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துடும். போலீசும் பாராஸ்ட்டுக்காரங்களும் நெனச்சா ரெய்டுக்கு வந்துருவாங்க.
சிந்தாமணி:
(கிணற்றுக் கைப்பிடிச் சுவரின் இடுப்பு சாய்த்து மார்பின் மேல் கைதட்டியவாறு யோசித்தபடி) எம் பொணம் போவுதோ, எந்தப் பொணம் போதா, இத விடக் கூடாதுடீ.சுசீலா. இவுனுங்க சாராயம் காச்ச ஆரம்பிச்சதுலேர்ந்து ஊர்ல வாலிபப் பசங்க மொதக் கொண்டு குடிக்கக் கத்துக்கிட்டாங்க…… வுட்டா ஊரே அளிஞ்சுரும் போல இருக்குது. அதுக்காகவாவது இந்த ரோட்டைப் போட்டே தீரணும்.
(சுசீலா கடைசித் துணியை உதறிக் கொடியில் நகர்த்திக் காயப்போடுகிறாள்)
சுசீலா: அதான் எனக்கும் தோணுச்சு. அத நான் மங்களா கிட்ட சொல்லலே . அவ பொலம்பற பொலம்பலுக்கு இதச் சொல்லி வேற ஏன் குளுர் வுடணும்? போகட்டும். இப்ப பதி மூணு மெம்பர்ல எத்தினி பேரு நமக்கு ஆதரவு?
சிந்தாமணி:
ஆறு நிச்சயம். சிவப்பிரகாசம் ஒருத்தர் தான் ஊசலாட்டத்துல இருக்கறாரு.
சுசீலா: ஏன்….. அவரு நியாயத்துக்குப் பக்கத்துல நிக்கற மனுசராச்சே!
சிந்தாமணி:
அது நடந்துருமோ….. இது நடந்துருமோண்ணு நூத்து நூதுப் பாத்துக்கிட்டிருந்தா ஒரு மண்ணாங்கட்டியும் நவுராது. நான் போயி அவர வெவரப் படுத்திட்டு வர்றேன். நீ குளிச்சு சாப்டுட்டு டாண்ணு பத்து மணிக்கு பஞ்சாயத்து ஆபீசாண்ட வந்துடு. நான் வரட்டா……. மணி ஒம்பதே கால் மசமசண்ணு நிக்காதே.
சுசீலா: தோ ஓடனே ரெடியாவுறேன் நீ கௌம்பு
(சிந்தாமணி வெளியே வந்து டிவிஎஸ் 50 ஐத் திறந்து ஸ்டார்ட் செய்தாள்)
No comments:
Post a Comment