Monday, 2 October 2017

காட்சி 3

காட்சி 3
காலம்  காலை மணி 9.30
இடம்: பழைய பிரசிடெண்ட் ஐயாக்கண்ணு வீட்டு ஹால்
உறுப்பினர்: (1) பழைய பிரசிடெண்ட் ஐயாக்கண்ணு (வயசு 60) (2) அவர் மகன் மருதப்பன் (3) மருமகள் மங்களா (வயது  28) மற்றும் ஆறு பஞ்சாயத்து உறுப்பினர்கள்
(பழைய பிரசிடெண்ட் ஐயாக்கண்ணு பெரிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் மகன் மருதப்பன் பக்கத்தில் நிற்கிறான். எதிரில் விரித்திருக்கிற ஜமுக்காளத்தில் ஆறு பஞ்சாயத்து உறுப்பினர்கள் அமர்ந்திருக்கின்றனர்)
ஐயாக்கண்ணு: (கால் மேல் கால் போட்டுக் குதி காலைத் தடவி விட்டபடி)
 பே சினது கவனம் இருக்குல்லே. ஏம்பா … காத்தவராயா .. நீ எழுந்து மொதல் கேள்வி கேக்றே…… என்ன?
காத்தவராயன்: சரிங்க தலைவரே!
ஐயாக்கண்ணு: நாராயணன் அடுத்து ஏந்திரிக்கணும்.
மருதப்பன்: (குறுக்கிட்டு) பூனப் புசுக்கனுங்க மாதிரி ஙய்யா முய்யாண்ணு மெண்ணு முழுங்கப்படாது. நல்லா போல்டா அவ பொடறிலே அடிக்கறாப்லே பேசணும்.
ஐயாக்கண்ணு: அத நாராயணன் கிட்ட சொல்லாதடா….. தோ இந்த செவத்தான் கிட்ட  சொல்லு. இவந்தான் தடுமாறுவான்.
செவத்தான்: போங்க தலைவரே (முகத்தைக் கோணிக் கொண்டு சிணுங்குகிறான்) ஒங்களுக்கு  எம் பேர்ல நம்பிக்கையே வரமாட்டேங்குது.
ஐயாக்கண்ணு: அட போடா! (சீற்றத்துடன்) போன கூட்டத்திலே  நல்ல சான்ஸ் வந்து கவுத்தவனே நீ தானடா! பஞ்சாயத்துத் தலைவர் பதவின்னா என்னண்ணு அன்னிக்கு ஒருகோடு காட்டி அந்தப் பொண்ணை கிடுகிடுக்க வச்சிருந்தீங்கன்னா இன்னிக்கு அவ ரோடு போடறேன்,தண்ணி டாங்க் கட்றேண்ணு அவளுக்கு தீர்மானம் கொண்டு வர தகிரியம் இருந்துருக்குமாடா?
ஆறுபேரில் ஒருவர்: நான் அன்னிக்கிக் கொரல் குடுத்தேன் தலைவரே….. இந்த செவத்தான் அன்னிக்கு சாராயத்தக் குடிச்சுட்டு வந்து ஔறிக் கெடுத்துப்போட்டான்.
மருதப்பன்: அதனால அவ இதெல்லாம் வெத்துப் பசங்க கூட்டம்ணு முடிவு கட்டிட்டா
நாராயணன்: இப்ப வுடறதில்லே தலைவரே! அவ கண்லே வெரல வட்டு ஆட்டிக் கதறி அழ வச்சுடறோம்.
மருதப்பன்: செவத்தான். இதுதான் வார்த்தை. நீ கேட்டுக்க கூட்டம் முடிஞ்ச பொறவு தான் நாக்கு மேல் சாராயத் தண்ணி வுழுவணும். தெரிஞ்சுதா?
செவத்தான்: சரிங்க  தலைவா! இவங்க அஞ்சு பேரயும் அப்றமாக் கேட்டுப் பாத்துக்குங்க
ஐயாக்கண்ணு: (சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரத்தைத் தலை உயர்த்திப் பார்த்தபடி) மணி ஒம்பதரை ஆவுது…… எல்லாருக்கும் காப்பி போடச் சொல்லியிருக்கேன். குடிச்சுட்டுப் போகலாம்….. ம்ம்….. அப்புறம் கும்பலா ஒரே கூட்டமாப்போயி நிக்காதீங்க. ஏதோ திட்டம் போட்டுட்டு வர்றாங்கண்ணு ஆயிடும். ஒவ்பொருத்தரா தனித்தனியா போங்க. சொன்னது கவனம் இருக்கா?
நாராயணன்: அந்தப் பொண்ணு கொண்டு வர்ற தீர்மானம் எதையும் நெறவேத்த முடியாமப் பண்ணிடறோம். நாங்க ஆறு பேர் இருக்கம்லே…. மெஜாரிட்டி.
மருதப்பன்: இல்லே. பதிமூணு மெம்பருங்க தானே! இன்னும் ஒண்ணு வேணும்.
நாராயணன்சிவப்பிரகாசத்த சேத்துட்டா ஏழு. தலைவா!
காத்தவராயன்: அந்த ஆளு ஒரு ஊசலாட்டக் கேசு தலைவரே…..
ஐயாக்கண்ணு: கவலைப்படாடேதே! நம்ம டிராக்டருதான் அவரு நெலத்திலே உழப்போயிருக்கு. அவுர அங்கியே மடக்கிப் போடச் சொல்லி டிராக்டர்காரங்கிட்ட சொல்ல ஆளனுப்பிச்சுட்டேன்.அவுரு வர மாட்டாரு. (மருதப்பனை நிமிர்ந்து பார்த்து) மருதப்பா, எல்லாருக்கும் காப்பி கொண்டாரச் சொல்லு.
மருதப்பன்: (உள்ளே திரும்பிப் பார்த்து) மங்களம் எல்லோருக்கும் காப்பி கொண்டா.
(மங்களம் ஒரு எவர் சில்வர் தட்டில் காப்பித்  தம்ளர்களைக் கொண்டு வருகிறாள். குனிந்து அவள்  ஒவ்வொருவரிடமும் நீட்ட நீட்ட ஆளுக்கு ஒரு தம்ளரை எடுத்துக் கொள்கின்றனர்)
ஐயாக்கண்ணு: (அனைவரும் குடிப்பதைப் பார்த்தபடியே) ஒரு பொட்டப்புள்ள வந்த நம்ம தலைமேல உக்காந்து அதிகாரம் பண்ணி ஆளவுட்டமா நாம தொலைஞ்சோம்! ஒரு தீர்மானத்தக் கூட அவ நெறவேத்த முடியாம அப்படியே  அவ குமுங்கிப் போய் நிக்கணும். இந்த பதவிக் காலம் முளுக்க ஒரு சுப்பலக் கூட அவள் இங்கன அங்கன நகத்த விடக் கூடாது. போடற போட்டுல அவளா ராஜினாமாப் பண்ணிட்டு ஓடிடணும் தெரியுதா?
அறுவரும்: சரிங்க தலைவரே. நீங்க பார்க்கத் தானே போறீங்க.
(மங்களம் அவர்களையும் தன் மாமனாரையும் மாறிப் மாறிப் பார்க்கிறாள். பிறகு தலைகுனிந்தவாறு அவர்கள் குடித்துவிட்டுக் கீழே வைத்த காப்பி டம்ளர்களை எடுத்துக் கொண்டு திரும்பிப் போகிறாள்.

No comments:

Post a Comment