காட்சி 4
காலம்: முற்பகல் 11,30 மணி
இடம்: மாங்குடி பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடம்
உறுப்பினர்கள்:
சிந்தாமணி சுசீலா உட்பட பதிமூன்று பேர். ஒரு கிளார்க்
வெளியே சிலர் கும்பலாகக் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருகின்றனர்.. உள்ளே பஞ்சாயத்து அவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய மேஜைக்குப் பின் நாற்காலியில் சிந்தாமணி உட்கார்ந்திருக்கிறாள். இடது கைப்புறமாக ஒரு ஸ்டூலில் ஒரு கிளார்க் உட்கார்ந்து குறிப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார். மேஜைக்கு நேர் எதிரே வலப்புறமும் எதிர் வரிசையில் ஆறு ஆறு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒரு நாற்காலி காலியாக உள்ளது.
மற்ற நாற்காலிகளில் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர். தலைவர் மேஜைக்கு அடுத்துள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த செவத்தான் எழுந்து கையை வீசி வீசி ஆவேசமாகப் பேசுகிறார்.
செவத்தான் இருக்கற வேலைய வுட்டுட்டு செரைக்கறதுக்கு போவற திட்டம் தான் சுடுகாட்டுக்கு ரோடு போட்டு தெரு வௌக்குப் போடற திட்டம். இப்ப என்னா தெனம் நாலு பொணமா போவுது அங்கே? ரோடு போடற செலவு எஸ்டிமேட்டு அறுவத்தி ஏழாயிரம்ணு இஞ்சினீயரு சொல்றாரு.
நாராயணன்:
(எழுந்து நின்று) நம்ப பஞ்சாயத்து வருச வருமானமே ரெண்டு லச்சத்து அறுவதாயிரம். இதுல சிப்பந்தி சம்பளம் தோட்டி தலையாரி சம்பளம் அது இது போக்கு மீதி நிக்கறது நிகரம் ஒரு லச்சம் தேறினா ஒசத்தி. இந்த தொகையில கிட்டத்தட்ட முக்கா லச்சத்த முழுங்கறாப்பிலே சுடுகாட்டுக்கு ரோடு போட்டுத் தீத்துட்டா மீதிய வச்சு எந்தப் பொடலங்கா வளர்ச்சி பண்றது?
காத்தவராயன்:
(எழுந்து குறுக்கிட்டு) ஏற்கனவே போட்டிருக்கற தெரு வௌக்குங்களே எரியறதில்லே இதிலே சுடுகாட்டுக்கு ரோடு போட்டு வௌக்கு வேற வெக்கப் போறாங்களோ?
சுசீலா: (எழுந்து) எந்த வார்டுலே எந்த்த் தெருவிலே வௌக்கு எரியலேண்ணு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க.
காத்தவராயன்:
(அவளை முறைத்துப் பார்த்துவிட்டு) ஏன்……. நீயும் இநத் ஊர்க்காரி தானம்மா…. எங்க பஜனைக் கோவில் தெருவுல எரிஞ்சுகிட்டிருந்த வௌக்கு அவிஞ்சு நாலஞ்சு நாளாச்சே.
செவத்தான்:
அது ரவ்வா ரவிக்குட்ம ஆள் நடமாட்டமும் வண்டி நடமாட்டமும் உள்ள எடம். முக்கு மூலை. அங்கயே வௌக்கு எரியலே….. எங்க ஊட்டுக்காரி ரெண்டு தபா தலைவி அம்மா வீட்டாண்ட போயி சொல்லிட்டு வந்தாங்க நானும் ஒரு வாட்டி சொன்னேன். ஒரு சுக்குச் சுண்ணாம்பும் ஆகலே. இந்த லச்சணத்திலே சுடுகாட்டுக்கு ரோடு போட்டு அங்க பொணம் எரியற வேடிக்கயைப் பார்க்க தெரு வௌக்கு போடக் கௌம்பிட்டீங்க.
அழகப்பன்:
(தன் எதிரில் குடிநீர் ஜக் வைத்திருக்கும் சிறு மேஜை அதிர அதை பலக்கத் தட்டி விட்டு உரத்த குரலில் பேசத் தொடங்குதகிறார்) நம்ம ஊரு மந்தவெளி மைதானத்திலே வருசா வருசம் எருது விடும் திருவிழா நடத்தறோமே! அங்கே ரோடு சரியில்லே….. சுத்துப் பக்கம் எல்லா இடத்திலே இருந்தும் நூத்துக்கு மேல மாடுங்க வருது. ஆயிரக்காணக்கா ஜனக்கூட்டம் வருது. அந்த எடத்துக்கு மொதல்ல ரோடு போடணும்னு போன வாட்டி கொண்டு வந்த தீர்மானத்த அடுத்த வருசம் பாத்துக்கலாம்ணு தள்ளிப் புட்டீங்க. இப்ப சுடுகாட்டுக்கு ரோடு போட என்னா அவசரம்? செவத்தான் சொன்னாப்பலே அங்கே தெனந்தெனம் நாலு ணமாப் போவுது?
வடிவேலு (ஓர் உறுப்பினர்): பிரசிடெண்ட் சிந்தாமணிம்மா வூட்டுக்காரன் முத்துசாமி காண்ட்ராக்ட் எடுத்துநாலு காசு பாக்க வேணாமாய்யா காண்ட்ராக்ட்காரருக்கு
தொளில் வேணும்ல?
(தொடர்ந்து நாலைந்து ஆண் குரல்கள் காச் மூச் சென்று கத்தும் இரைச்சல்)
சிந்தாமணி:
(மேஜையை மூனறு முறை கையால் உரத்த ஓசை வரும் வித்த்தில் தட்டியபடி எழுந்து நின்று) அமைதி….. அமைதி
சுசீலா: (கோபத்தோடு குறுக்கிட்டு) இவங்கள்ளாம் என்ன காரணத்துக்காக சுடுகாட்டு ரோடு வேண்டாம்ணு எதிர்ப்பு சொல்றாங்கண்ணு புரியுது. அங்க ரோடு போட்டா ஜீப்பும் வந்துடும். அப்படி வந்துரக் கூடாதுண்ணு இவங்க அபிப்பிராயம் முக்கியமா கள்ளச்சாராயம் காச்சி விக்கிற பழைய பிரசிடெண்ட் ஐயாக்கண்ணு மகன் மருதப்பன் தொளிலுக்கு அது எடஞ்சல் ஆயிடும்.
இரண்டு மூன்று ஆண் குரல்கள்: ஒக்கார்றீ, நீ யாருண்ணு எங்களுக்குத் தெரியும்?
செவத்தான்:
நீ என்னா சொல்ல வர்றடீ? நாங்க கள்ளச் சாராயம் வாங்கிக் குடிக்கறவங்கறியா? கைக் கூலிங்கறியா? இன்னொரு தபா இப்படிப் பேசனே…… நடக்கறதே வேற!
(காத்தவராயனும் வடிவேலுவும் அவளைத் தாக்கப் போக வேறு இருவர் பாய்ந்து அவர்களைத் தடுத்துப் பிடிக்கிறார்கள்…….
வலுக்கட்டாயப்படுத்தி அவர்களை நாற்காலியில் அமர்த்துகின்றனர்)
நின்று கொண்டிருக்கும் சிந்தாமணி மேஜையை ஓங்கி மீண்டும் இருமுறை தட்டுகிறாள்.
சிந்தாமணி:
(கம்பீரமான குரலில்) அமைதி….. அமைதி.
(அந்தக் குரலில் தொனிக்கும் கம்பீரத்தால் கூட்டம் அமைதியாகிறது)
இது பஞ்சாயத்துக் கூட்டம் சந்தக் கடையோ, மீன் கடையோ இல்லே. ஆமபள மெம்பருங்க பொம்பளை உறுப்பினரை வாடீ போடீண்ணு வாய்க்கு வந்தாப்பிலே பேசறத நான் அனுமதிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் அக்கா தங்கச்சியும் பெஞ்சாதியும் தாய்மாரும் இருக்காங்க. அவங்கள இப்படி வேற யாராவது தரக் கொறவா பேசினா நீங்க தாங்கிட்டு இருந்துடுவீங்களா? கொஞ்சமாவது கௌரவமாப் பேசறது தான் பெரியவங்களுக்குக் கண்ணியம் (சுசீலாவின் பக்கம் திரும்பி) சுசீலா. நான் பேச எழுந்தப்பறம் நீங்க குறுக்கிட்டுப் பேசுனது தப்பு. அதனாலதான் வெவகாரமாயிடுச்சு. யார் பேச எழுந்தாலும் அவங்க பேசி முடிக்கற வரை காத்திருந்துட்டுப் பேசுங்க. (மெம்பர்கள் பக்கம் திரும்பி) சுடுகாட்டுப் பக்கம் யார் கள்ளச் சாராயம் காச்சறாங்கண்ணு கண்டிக்கறது இல்லே நம்ம தீர்மானம். சுடுகாட்டுக்கு ரோடு போடணுமா வேணாமா? இதான் விவாதத்துக்கு எடுத்துக் கிட்டிருக்கற தீர்மானம்.
செவத்தான்:
ரோடு போடறதுக்கு செலவு பண்ற அளவு நம்ம பஞ்சாயத்தில பணம் இல்லே. நான் இதக் கடுமையா
எதிர்க்கிறேன். (சொல்லிவிட்டு உட்கார்கிறார்)
சிந்தாமணி:
நாம மொதல்ல போடப் போறது மண் ரோடுதான். அதுக்கும் ஒவ்வொரு வார்டர் போயி நான் வேண்டிக்கிட்டதுல மாட்டு வண்டி வச்சிருக்கிற நாலு பெரிய மனசுக்காரங்க மூணு நாளைக்கு வண்டியும் மாடும் எனாமா ஓட்டிக்கிட்டு வர ஒத்துக்கிட்டாங்க
நாராயணன்: வண்டி மாடு வந்தாப் போதுமா? மண்ணை எங்கருந்து வெட்டிக் கொண்டாருவீங்க? மண்ண வெட்டி
வண்டில ஏத்த வெட்டு கூலிக்கு எங்க போவீங்க?
சிந்தாமணி:
அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். இளைஞர் நற்பணி மன்றத்து இளைஞருங்க எல்லாருமாச் சேந்து ஏரி மண்ணை வெட்டி எலவசமாக் கூலி வாங்காம கொண்டு வந்து போட ஒப்புத்துட்டாங்க. அவங்களுக்கு டீ காபி சாப்பாட்டு வகையறாவ நாங்க பாத்துக்கறோம். அப்படின்னு நம்ம ஊரு சேவா நிலையம்ங்கற தன்னார்வ மையம் ஏத்துக்கிட்டிருக்கு.
வடிவேலு: மண்ணை வெட்டி வண்டிலே ஏத்திட்டா மட்டும் போறுமா? அத இங்க ரோடு மூச்சூடும் வந்து கொட்டத் தாவலே?
சிந்தாமணி:
ஏரி மண்ணை சுடுகாட்டு ரோடு பக்கம் எடதுபுறமும் வலது புறமும் எட்டெட்டு பிளாக்கா கொண்டாந்து கொட்டிடுவாங்க. அதப் பரப்பி நெரவி விடணும். அப்பறம் ரோடு ரோலர் போட்டு சமப்படுத்தி விடணும். நாலு பொம்பள ஆறு நாலு ஆம்பள ஆளு ஒரு மேஸ்திரி இருந்தாப் போறும். அவங்களுக்கு நாள் கூலிக்கணக்கா அன்னாடம் ஆறு நூறு ரூபா மேனிக்கு மூணு நாலு நாள் குடுத்தாப்போது. மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டாயிரம் ரூபா கூட ஆவாது.
நாராயணன்: எத்தனையோ வேலைங்களும் திட்டமும் இருக்க குறிப்பா ஏன் சுடுகாட்டு ரோட்டுக்கு இப்ப அவசரம்?
சிந்தாமணி: (புன்முறுவலுடன்)
மேச்சலுக்கு கால்நடைகள ஓட்டிட்டுப் போறவங்க வர்றவ வெறகுச் சுமை எடுத்து வர்றவங்கண்ணு அங்கே தெனம் ஜன நடமாட்டம் இருக்கு. அதோட பஞ்சாயத்துப் பொறம் போக்கு நெலத்தில வச்ச தோப்பிலர்ந்து மரங்கள திருட்டுத்தனமா வெட்டிடறாங்க. அதுவும் ராத்திரி நேரத்திலே. அங்க ரோடு போட்டு
வெளக்கும் போட்டா அத தடுக்க முடியும்.
செவத்தான்:
(எழுந்து நின்று) ஊருக்குள்ளற எரியற வௌக்கே எரியறதில்லே….. அங்க எங்கே எரியப் போவுது?
சிந்தாமணி:
தயவு செஞ்சு உட்காருங்க. பஜனைக் கோவில்
தெரு வௌக்குக்கு ரெண்டு நாளா சொல்லி கிட்டு வர்றேன். கரண்ட் ஆபீஸ்ல. இன்னிக்கு நிச்சயம் விளக்கு எரியும். மந்தவெளில ரோடு போடணும்ணு எட்டாவது வார்டு மெம்பர் சொன்னாரு. அதுக்கு கலெக்டர்கிட்ட சொல்லிட்டேன். சாலை வளர்ச்சித் திட்டத்திலே அத சேத்து ரெண்டு மூணு மாசத்திலயே செஞ்சுர்றதா நம்ம கலெக்டர் ஏத்துக்கிட்டு இருக்காங்க.
சுசீலா: தலைவர் அவர்களே. நான் பேசலாமா?
சிந்தாமணி:
பேசுங்க
சுசிலா: சுடுகாட்டுப் பாதை திட்டத்தை ஏகமனாதா நிறைவேத்தலாம்ணு சொல்லிக்க விரும்பறேன்.
செவத்தான்,
நாராயணன், காத்தவராயன்: (மூவரும் ஒரே குரலில்) கூடாது. ஓட்டுக்கு விடணும். ஓட்டுக்கு விடணும். (குரல்கள் சிறிது சிறிதாக உயர்ந்து ஒலிக்கின்றன) ஓட்டுக்கு விடு. ஓட்டுக்கு விடு.
(சுசீலாவும் சிந்தாமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
டீக்கடைக்கார்ர்
ஒருவர் கதவின் அருகே வந்து நிற்கிறார். சிந்தாமணியும் சுசீலாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்க்கின்றனர்)
சிந்தாமணி:
(டீக்கடைக்கார்ர் சுகவனத்தைப் பார்த்து) என்ன வேணும் சுகவனம்? காப்பி கொண்டாந்திருக்கீங்களா?
டீக்கடைக்கார்ர்:
அது ரெடியா இருக்கும்மா… வந்து சுசீலாம்மா புருசன் வெளிலே நிக்கறாரு அர்ஜண்டா அவங்களப் பாக்கணுமாம்.
சுசீலா: (நாற்காலியை விட்டு எழுந்து) ஓட்டெடுப்ப ஒரு அஞ்சு நிமிசம் நிறுத்தி வெக்கணும்ணு கேட்டுக்கறேன். தோ வந்துடறேன் (வெளியேறு முன் சிந்தாமணியைப் பார்த்துத் தலையசைக்கிறாள்)
சிந்தாமணி:
சீக்கிரமா வந்துரணும் (டீக்கடைக்காரரைப் பார்த்து) நீங்க காப்பி கொண்டாங்க (உறுப்பினர்கள் பக்கம் திரும்பி) காப்பி வருது. சாப்டுட்டுத் தீர்மானத்தை ஓட்டுக்கு விடலாம்.
செவத்தான்:
அதென்னம்மா அது? அவங்க கூட்டத்துக்கு நடுவாந்தரத்திலே எழுந்து போறாங்க. அவங்க வர்றதுக்காக ஓட்டெடுப்ப நிறுத்தணும்ங்கறீங்க?
சிந்தாமணி:
நான் நிறுத்தச் சொல்லல்லியே. காப்பிய சாப்டுட்டு உற்சாகமாக நடத்தலாமே
(டீக்கடைக்காரர் ஒரு பெரிய அலுமினியத் தட்டில் காப்பி டபராக்களை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார்)
(பஞ்சாயத்துக் கட்டிடத்தின் வெளிப்புறம் டீக்கடைக்கு எதிரே சுசீலாவும் அவள் கணவ னும் பேசிக் கொண்டு நிற்கின்றனர்.
சுசீலா முகத்தில் பதற்றம்)
சுசீலா: என்னங்க ஆச்சு? சிவப்பிரகாசம் வந்தாத்தான் மெஜாரிட்டி தீர்மானத்த நெறவேத்த முடியும். கையோட இட்டாரேண்ணு போனீங்களே… என்ன சொல்றாரு அந்த ஆளு?
பொன்னையன்:
அப்பவே களம்பிட்டாரு.
இத நீ போ பின்னாலயே வர்றேண்ணு சைக்கிள் எடுத்தாரே, எங்கண்ணு முன்னால….
சுசீலா: படுபாவிங்க வழியில மடக்கிட்டாங்களா?
பொன்னையன்:
அவருக்கு எல்லா வெவகாரமும் தெரியும். குறுக்கு வழியிலே வந்துடுவாரு
சுசீலா: இன்னும் காணமே (சாலையைப் பார்க்கிறாள்)
பொன்னையன்:
(திரும்பி நேர் எதிர்த் திசையில் பார்த்தவள்) தோ,பார்றீ அரக்கப் பறக்க சைக்கிள் மிதிச்சுட்டு ஓடியாறாரு
சிவப்பிரகாசம்:
(மூச்சு வாங்க அவர்களை நெருங்கி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபடி) “கூட்டம் முடிஞ்சிருச்சா?“
சுசீலா: அப்பாடா…. வந்து சேந்தீங்களே சாமி! இல்ல முக்கியமான கட்டத்துல தான் வந்திருக்கீங்க.. இனிமேதான் ஓட்டெடுப்பு. கரெக்டா வந்துட்டீங்க. இனிமேதான் ஓட்டெடுப்பு. கரெக்டா வந்துட்டீங்க. . சட்டுணு போயி நடவடிக்கைப் புத்தகத்திலே கையெழுத்துப் போடுங்க.
(காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் வருகையைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர்)
செவத்தான்:
(அருகில் உள்ள நாராயணனிடம்) ஏம்பா, அதெப்படி இவன் தீர்மானத்த ஓட்டுக்கு வுடறப்ப கரெக்டா வந்து நிக்கறான்? ஆளவுட்டுத் தருவிச்சிருக்பாளா?
நாராயணன்:
(அடங்கிய குரலில்) என்ன நடக்குதுண்ணு பாத்துரலாமே
சிவப்பிரகாசம்:
மன்னிக்கணும் நெலத்திலே டிராக்டர் ஓட்டிருந்தாங்க. ரிப்பேர். அதான் லேட் ஆய்டுச்சு (வேகமாக கிளர்க்கை நெருங்கி உறுப்பினர் வருகைக் குறிப்பில் கையெழுத்து போடுகிறார்)
(சுசீலா உள்ளே வருகிறாள். டீக்கடைக்கார்ர் உறுப்பினர்கள் குடித்துவிட்டு வைத்த கிளாஸ்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது சிந்தாமணியும் சுசீலாவும் ஒருவரை ஒருவர் வெற்றிப் பார்வை பார்த்துக் கொள்கின்றனர்.
டீக்கடைக்காரர் வெளியேறுகிறார்)
சிந்தாமணி:
ஓட்டெடுப்பை ஆரம்பிக்கலாமா?
அனைவரும்: ஓ ஆரம்பிக்கலாம்
சிந்தாமணி:
குரல் ஓட்டு மூலமே நடத்திடலாம்ணு நெனக்கறேன்
நாராயணன்: ஆமாம்…. அப்படியே செய்யுங்க.
சிந்தாமணி:
சுடுகாட்டுக்கு ரோடு போடற திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க கையை உயர்த்தலாம்.
(சிவப்பிரகாசம் உட்பட ஏழு கைகள் உயர்கின்றன. கிளார்க் கைகளை எண்ணி குறிப்பில் எழுதிக் கொள்கிறார்)
சிந்தாமணி:
எதிர்க்கிறவங்க கையை உயர்த்தலாம்
(ஆறு கைகள் மட்டும் உயர்கின்றன. கிளார்க் கைகளை எண்ணி குறிப்பில் எழுதிக் கொள்கிறார்.)
சிந்தாமணி:
இந்த சுடுகாட்டு ரோடு போடற திட்டத்துக்கு ஆதரவா ஏழு ஓட்டு எதிர்த்து ஒரு ஓட்டு. தலைவிங்கற முறையில என் ஓட்டையும் ஆதரவுக்குப் போடறேன். ஆக எட்டு ஓட்டு. பெரும்பான்மை ஓட்டுக்கள் வாங்கி இந்தத் தீர்மானம் நிறைவேறுது.
(சில கைதட்டல்கள் ஒலிக்கின்றன)
செவத்தான்:
சே! கவுத்துட்டாண்டா சிவப்பிரகாசம்
நாராயணன்: வடிவேலு (ரகசியக் குரலில்) இப்ப குடிநீர் ஓவர் டாங்க் கட்டற திட்டத்தையும், மரக் கண்ணு நட்டு வளர்க்கிற தீர்மானத்தையும் இவ கொண்டாந்து ஜெயிச்சுடுவா!
வடிவேலு: என்ன பண்ணுவம்?
காத்தவராயன்:
நாராயணா நீ எழுந்து எங்களுக்கு அவசர வேலை இருக்கறதால பஞ்சாயத்துக் கூட்டத்த ஒத்தி வக்கணும்ணு சொல்லு.
நாராயணன்: அதான் சரி. இவள இத்தோட மடக்கிடணும்
சிந்தாமணி:
அடுத்து மேல் நிலைக் குடிநீர்த் தொட்டி கட்டற தீர்மானம். இதை ஏழாவது வார்டு உறுப்பினர் சுசீலா முன் மொழியறாங்க.
நாராயணன்:
(எழுந்து நின்று) கூட்டத்த இத்தோட ஒத்தி வக்கணும். அவங்கவங்க நெலத்துல ஏர் ஓட்ற டயம். நாங்கள்ளாம் எங்க வேல வெட்டிய உட்டுட்டு ஒக்காந்து பேசிட்டிருக்கோம். சிவப்பிரகாசம் ஹாய்யா நெலத்தில டிராக்டர் ஓட்டிட்டு வந்து ஓட்டுப் போட்டுட்டாரு.
காத்தவராயன்:
(எழுந்து) ஆமா….. கூட்டத்த ஒத்தி வக்கணும்.
(பழைய பிரசிடெண்ட் கோஷ்டி ஆட்கள் ஒருவர் மாற்றி ஒருவர் எழுந்து கூட்டத்தை ஒத்தி வை.
கூட்டத்தை ஒத்தி வை… என்று உரத்த குரலில் கத்துகின்றனர். சிந்தாமணியும் சுசீலாவும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
கூட்டம் சலசலப்பில் தொடங்கி கூட்டத்தை நடத்து என்று எதிர்க் குரல்கள் வலுக்கவே – இது சச்சரவில் முடியும் நிலை வந்துவிடும் என்று புரிந்து கொள்கிறாள் சிந்தாமணி.
சிந்தாமணி
(எழுந்து நின்று) மெஜாரிட்டி ஓட்டுப்படி நிறைவேறிய சுடுகாட்டு ரோடு போடும் திட்டத்தோடு மறு தேதி குறிப்பிடாம இந்தக் கூட்டத்தை ஒத்தி வைக்கிறேன்
(ஐயாக்கண்ணு சார்பு ஆட்கள் ஆறுபேரும் கை தட்டி ஆரவாரிக்கின்றனர்.
ஒருவர் பின் ஒருவராக கலைந்து செல்கின்றனர். இறுதியில் சிந்தாமணியும் சுசீலாவும் மட்டும் நிற்கின்றனர்)
சுசீலா. என்ன சிந்தாமணி. கூட்டத்த ஒத்தி வச்சுட்டே?
சிந்தாமணி:
சுடுகாட்டு ரோடுத் தீர்மானம் ஜெயிச்சுட்ட வெறியில அவங்க முறுக்கிட்டு நிக்கறாங்க. அப்பறம் ரெண்டு தீர்மானம் கொண்டு வந்தா கட்டாயம் கலகம் பண்ணுவாங்க. இரு கொஞ்சம் வுட்டுப் புடிப்போம்.
சுசீலா: சரி அதுவும் சிந்தாமணி! பஜனைக் கோவில் தெருவுல தெரு வௌக்கு எரியலேன்றாங்க. அந்தப் புகார வச்சுப் பெரிசு படுத்துவாங்க.
சிந்தாமணி:
இத நேரா லைன்மேனப் பார்க்கத்தான் கௌம்பிட்டிருக்கேன்?
( வெளியே நிற்கும் டிவிஎஸ் 50 ஐ நெருங்குகிறார்கள்)
[தொடரும்]
No comments:
Post a Comment