காட்சி 5
காலம்: பிற்பகல் மணி 2.00
இடம்: தெரு
உறுப்பினர்:
(1) சிந்தாமணி (2) லைன்மேன் (3) லைன்மேனுக்குத் துணையாள்
(சிந்தாமணியின் டிவிஎஸ் 50 பஜனைக் கோயில் தெருவில் உள்ள ஒரு தெரு விளக்கின் அருகில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தெரு விளக்குக் கம்பத்தின் மேல் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறார். வெயில் கண்ணில் விழாமல் நெற்றி மேல் கை வைத்து சிந்தாமணி விளக்குக் கம்பத்தில் ஏறுகிறவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கம்பத்தின் கீழே நிற்கும் லைன்மேன் ஏறுபவரைப் பார்த்தவாறு நிற்கிற சிந்தாமணியிடம் பேச்சுக் கொடுக்கிறார்)
லைன்மேன்: என் சர்வீஸ்ல ஒரு தெரு விளக்கு எரியாததுக்கு இவ்வளோ அக்கறை எடுத்துப் பாத்துக்கிட்ட மொத பிரசிடெண்ட் நீங்க தாம்மா.
சிந்தாமணி:
ஐஸ மட்டும் வெச்சுடுவீங்க. ஆனா ஆளுங்கள எப்பவும் அலைய வுடுவீங்க.
லைன்மேன்: பாத்தீங்களா… பாத்தீங்களா… நான் ஏம்மா ஒங்களுக்கு ஐஸு வெக்கணும்? என் அநபவத்தில் கண்டத்த சொல்றேன்.
சிந்தாமணி:
மூணு நாளா நான் ஆள வுட்டுச் சொல்லியும் நீங்க கண்டுக்கல.
லைன்மேன்: ஐயோ, அது எங்க தப்பு இல்லம்மா? இந்த எல்பரு மச்சினி கண்ணாலத்துக்கு லீவ் போட்டுப் போயிட்டான். நான் ஒண்டிக்காரன் எத்தினி
ஃபால்ட்டப் பாக்கறது. எனக்கு
இன்னா சந்தேகம்னா இந்த பல்பு பீஸ் போயிருக்கணும்.
விளக்குக் கம்பத்தில்
ஏறிய ஹெல்பர்: (கீழே குனிந்து லென்மேனிடம்) அண்ணாத்த, பல்ப் தான் பீஸ் போய்ட்டிருக்கு.
லைன்மேன்: பாத்தீங்களா…. நான் சொன்னது கரக்டாப் போச்சு! (மேலே உயர அண்ணாந்து பார்த்து) பல்ப்ப மாத்திர்றா முனியா!
ஹெல்பர்: தோ (ஒரு கையால் கம்பத்தைத் தழுவிப் பிடித்தபடி மற்றொரு கையால் வலது பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு புது பல்ப் எடுத்து மாட்டுகிறான்)
லைன்மேன்: இந்த பல்புனாலேதாம்மா தாமதம் ஆயிடுச்சு. எங்க கொடவுன்ல போய் எப்ப கேட்டாலும் பல்பு ஸ்டாக் இல்லே இல்லேன்றாங்க. நீங்க இம்மாந் தொலவு வற்புறுத்ததனால நான் நேத்திக்கு ஒரே ஒர பல்பாவது குடுங்கய்யாண்ணு கேட்டு வாங்கியாந்தன்.
சிந்தாமணி:
ரொம்ப நன்றிங்க லைன்மேன்!
லைன்மேன்: ஐய… எனக்கு என்னாத்துக்கும்மா நன்றி…. கடமயச் செய்றோம். நீங்க தூண்டுகோலா இருக்கறதால வெரசலா செய்றோம். மெய்யாலும் நன்றி சொல்லணும்னா இந்த தெருக்காரங்க ஒங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். முக்கியமாக அந்த எதிர்வூட்டுக்காரங்க.
சிந்தாமணி:
(எந்த வீட்டைத் திரும்பிப் பார்த்துவிட்டு) ஏன் அவ்ள குறிப்பா அந்த வீட்டச் சொல்றீங்க?
லைன்மேன்: அந்த வூட்டுக்காரம்மா தெரு லைட் வெளிச்சத்திலே ராத்திரியிலே குளிப்பணியாரம் வடை போண்டா சுட்டு விக்கும். மூணு நாளா பிசினஸ் இல்லே. அது நேத்து பூரா தெருவுலே ஒக்காந்து என்னாடா கவுருமெண்ட்ட என்னாடா பஞ்சாயத்துண்ணு வர்றவங்க போறவங்க கிட்டல்லாம் நிக்க வச்சு கடாஞ்சு வுட்டுடிச்சி.
சிந்தாமணி:
(சிரித்துவிட்டு) அப்படியா? இப்ப நான் போயி அந்தம்மாவ வெளிய கூட்டிட்டு வந்து காட்டிடறேன்.
லைன்மேன்: ஐய நீங்க வேற! லைட் எரியுதுண்ணு கண்ணால வேற காட்டணுமாக்கும். போங்கம்மா நீங்க.
சிந்தாமணி: இல்லீங்க லைன்மேன். ஏதோ குழிப்பணியாரம் வட போண்டா வித்து நடக்கற பொழுப்பு நின்னு போனா வருத்தம் தானே! இப்ப ஆறுதல் வரும். நீங்க ஹெல்பர் கிட்ட ஃபீஸ் கேரியர மாட்டச் சொல்லுங்க.
லைன்மேன்: டே முனியா! ஃபீஸ் கேரியர மாட்டு. பிரசிடெண்ட் அம்மாவுக்கு வௌக்க எரிய வுட்டுக்காட்டு.
(ஹெல்பர் பீஸ் கேரியரை மாட்டவும் விளக்கு எரிகிறது)
சிந்தாமணி:
இப்படியே கொஞ்ச நேரம் எரியட்டுமே!
லைன்மேன்: ஓ! தாராளமா
சிந்தாமணி:
நன்றிங்க லைன்மேன்.
லைன்மேன்: இருக்கட்டும்மா
(சிந்தாமணி தெரு விளக்குக் கம்பத்திற்கு எதிரில் உள்ள வீட்டினுள் நுழையத் திரும்புகிறாள்)
No comments:
Post a Comment